Published : 30 Jan 2020 07:50 AM
Last Updated : 30 Jan 2020 07:50 AM

தேர்வுக்குத் தயாரா? - விருப்பத்துடன் திருப்புதல் செய்வது மதிப்பெண்ணை உயர்த்தும்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 1 பொருளியல்

பிளஸ் 1 பொருளியல் பாடம் பிளஸ் 2 பொருளியல் மற்றும் அதுசார்ந்த உயர்கல்விக்கும் அடிப்படை ஆகும். மேலும் போட்டித்தேர்வுகளுக்கும் அடிப்படையான பாடப்பகுதிகள் பிளஸ் 1 பொருளியலில் உள்ளன. எனவே இப்போதைய தேர்வுக்கான மாணவர்களின் உழைப்பு, மதிப்பெண்களுக்கு அப்பாலும் அவர்களின் எதிர்காலத்துக்கு பேருதவியாக அமையும்.

வினாத்தாள் அமைப்பு

90 மதிப்பெண்களுக்கான பிளஸ் 1பொருளியல் வினாத்தாள் 4 பகுதிகளாக அமைந்துள்ளது. ஒரு மதிப்பெண் பகுதி 20 வினாக்களுடன் இடம்பெறுகிறது. 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகள் கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து 7-க்கு விடையளிப்பதாகவும், அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகவும் இடம்பெறுகிறது. ’அல்லது’ வகையிலான 7 வினாக்கள் 5 மதிப்பெண் பகுதியில் அமைந்துள்ளன.

குறிப்புகளின் வரிசை

ஒரு மதிப்பெண் பகுதியின் 20 வினாக்களில் பெரும்பாலானவை புத்தகத்தின் பின்னுள்ள வினாக்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. ஓரிரு வினாக்கள் பாடங்களின் உள்ளிருந்து இடம்பெறுகின்றன. இரு மதிப்பெண் வினாவுக்கு 50 வார்த்தைகளுக்குள் பதிலளிக்க வேண்டும். அந்த விடைகளும், முக்கியக் குறிப்புகளின் (Important key points) அடிப்படையில் ஒன்றின் கீழ் மற்றொன்றாக வரிசை எண் கொடுத்து எழுதுவது முழு மதிப்பெண்ணுக்கு உதவும். குறைந்தது 3 பாயிண்டுகள் எழுதலாம்.

3 மதிப்பெண் பகுதி வினாவுக்கு 150 வார்த்தைகளுக்குள் பதிலளிக்கலாம். இப்பகுதியிலும் பாயிண்டுகள் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதுவது நல்லது. 5 பாயிண்டுகள் வரை எழுதலாம். 5 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட ‘அல்லது’ வினாக்களில் நன்கறிந்த, பிழைகளுக்கு வாய்ப்பில்லாத, முழு மதிப்பெண் தரக்கூடிய வினாவை தேர்வுசெய்து பதில் எழுத வேண்டும். 250 வார்த்தைகளுக்குள் விடையளிப்பதும், பாயிண்டுகளை வரிசைப்படுத்தி எழுதுவதும் நல்லது. நீளக் கட்டுரையாக எழுதுவதை தவிர்க்கலாம். படங்களுக்கு என தனியாக மதிப்பெண் ஒதுக்கப்படுவதால், கேட்கப்பட்ட வினாவுக்கு படம் அவசியமெனில் அதை வரைவதும் முக்கியம்.

உள் வினாக்கள்

ஒரு மதிப்பெண் பகுதி மட்டுமன்றி இதர வினாக்களிலும் பாடங்களின் உள்ளிருந்து ஒரு சில வினாக்கள் கேட்கப்படும். அம்மாதிரியான வினாக்கள் குறித்து மாணவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. பாடங்களின் பின்னுள்ள வினாக்கள் தொடர்பானவையாகவும் அவை அமைந்திருக்கலாம். நன்கு யோசித்து பதிலளித்தால், அறிந்த வினாவை சற்றே மாற்றி கேட்பதாகவும் அவை இருக்கலாம்.

பாடங்களை வரிக்கு வரி முழுமையாக வாசித்து, புரிந்துகொண்டு படிப்பதே சிறந்தது. மேலும் முக்கிய இடங்களை அடிக்கோடிட்டும், அதன் அருகில் கூடுதல் குறிப்புகளை எழுதி வைத்துப் படிப்பதும், திருப்புதல் செய்வதும் நல்லது. இந்த ஏற்பாடுகள் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு தடுமாற்றமின்றி விடையளிக்க உதவும். அத்துடன் இதர வினாக்களை புரிந்துகொள்ளவும், தொடர்புபடுத்தி கற்கவும், சொந்த நடையில் எழுதவும் நம்பிக்கை தரும்.

தேர்ச்சி நிச்சயம்

பாடங்களின் பின்னுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களில் கவனம் செலுத்தி படித்தால், அப்பகுதியின் சுமார் 10 முதல் 15 வினாக்களுக்கு எளிதில் விடையளித்து விடலாம்.முதல் 3 பாடங்களை அனைத்துமாணவர்களும் நன்கு படித்திருப்பார்கள். மேலும் இதுவரையிலான பல்வேறு தேர்வுகளிலும் நன்கு விடையளித்துப் பழகியிருப்பார்கள். இந்த 3 பாடங்களுடன் 9,10,11 பாடங்களையும் சேர்த்து, மொத்தம் 6 பாடங்களை குறிவைத்து நன்றாக படிக்க வேண்டும். மெல்லக்கற்போர் தேர்ச்சியை உறுதி செய்வதுடன், கூடுதல் மதிப்பெண் பெறவும் இப்பாடங்கள் உதவும்.

இந்த 6 பாடங்களிலிருந்து இருமதிப்பெண் வினாக்கள்-5, மூன்றுமதிப்பெண் வினாக்கள்-5 மற்றும்ஐந்து மதிப்பெண்ணில் 3 அல்லது 4 வினாக்களை எதிர்பார்க்கலாம். இவ்வாறு குறைந்தது 50 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். தேர்வு நெருக்கத்தில் புதிய பாடங்களைப் படிப்பதற்கு பதிலாக ஏற்கனவே படித்த மற்றும் வழிகாட்டுதலில் வழங்கப்பட்ட பாடங்களை படிப்பதும், எழுதிப் பார்த்து திருப்புதல் செய்வதும் மேற்குறிப்பிட்ட மதிப்பெண்களை உறுதி செய்யும்.

அதிக மதிப்பெண்களுக்கு

2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு பாடங்களின் முக்கியக் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்பதுடன் எழுதிப் பார்த்தும் திருப்புதல் செய்யவேண்டும். வினாதோறும் அவசியமானதுணை தலைப்புகள், வரைபடம், அட்டவணை ஆகியவற்றை உரிய வகையில்எழுதுவது அவசியம். 'பொருளியலுக்கான கணித முறைகள்' பாடத்தை கடினமானதாக மாணவர்கள் கருதுகிறார்கள். இப்பாடத்தின் எடுத்துக்காட்டு கணக்குகளில் இருந்தே வினாக்கள் அமைய வாய்ப்புள்ளதால் அவற்றைமுறையாக தீர்த்துப் பழகுவதும், திருப்புதல் செய்வதும் அவசியம்.

எந்த மதிப்பெண்ணுக்குரிய பாடப்பகுதியானாலும், அதன் உள்ளிருந்து கேட்க வாய்ப்புள்ள இதர வினாக்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். மேலும், வினாவை எவ்வாறு மாற்றி கேட்க வாய்ப்புண்டு என்பதையும், ஒரேபதிலுக்கான பல்வேறு வினாக்களையும் அறிந்துகொண்டு திருப்புதல் செய்வதும் நல்லது.

நேர மேலாண்மை

ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20, 2மதிப்பெண்களுக்கு 25, 3 மதிப்பெண்களுக்கு 45, 5 மதிப்பெண்களுக்கு 75 என நிமிடங்களை அதிகபட்சமாக பிரித்து ஒதுக்கினால், குறைந்தது 15 நிமிடம் விடைத்தாள் சரிபார்த்தலுக்கு கிடைக்கும்.

கட்டாய வினா கணக்குகள்

2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் இடம்பெறும் தலா ஒரு கட்டாய வினா (வினா எண்.30 மற்றும் 40), எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம். பொதுவாக கட்டாய வினாக்கள் கணக்குகளாக கேட்கப்படுவதன் அடிப்படையில், 12-வது பாடமான ‘பொருளியலுக்கான கணித முறைகள்’ முக்கியத்துவம் பெறுகிறது. இப்பாடத்தில் உள்ளகணக்குகள் குறிப்பாக எடுத்துக்காட்டு கணக்குகளில் உரிய பயிற்சி மேற்கொள்வது கட்டாய வினாக்களின் முழு மதிப்பெண்ணுக்கு உதவும்.

- பாடக்குறிப்புகள் வழங்கியவர்: பா.ஜனார்தனன், முதுகலை ஆசிரியர் (பொருளியல்), தி மெட்ராஸ் சேவா சதன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x