Published : 24 Jan 2020 08:33 AM
Last Updated : 24 Jan 2020 08:33 AM

செய்திகள் சில வரிகளில்: புரஸ்கார் விருது பெற்ற 49 குழந்தைகளை சந்திக்கிறார் பிரதமர்

கலை, கல்வி, பண்பாடு, துணிச்சல், ஆராய்ச்சி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது (பால சக்தி புரஸ்கார் விருது) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2020-ம்ஆண்டுக்கான விருதுக்கு 49 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்றுமுன்தினம் நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்நிலையில், விருது பெற்ற அந்த 49 குழந்தைகளை பிரதமர் மோடி இன்று சந்தித்து உரையாடுகிறார்.

அத்துடன், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் 1,730 பழங்குடியின கலைஞர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களையும் மோடி சந்தித்து உரையாடுகிறார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஜூன் 3-ல் தேர்வு

சென்னை

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து அரசுத்

தேர்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான 2020-ம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

அதன்படி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 3 முதல் 19-ம் தேதி வரையும், முதல் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 4-ம் தேதி தொடங்கி ஜூன் 22-ம் தேதி வரையும் நடைபெறும். அதற்கான பாடவாரியாக தேர்வுக்கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மாணவர்கள், தனித்தேர்வர்கள் அதில் சென்று பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x