Published : 22 Jan 2020 03:19 PM
Last Updated : 22 Jan 2020 03:19 PM

''பரவாயில்லை, இது வெறும் தேர்வுதான்''- வைரலாகும் பள்ளி முதல்வரின் கடிதம்!

பரவாயில்லை, இது வெறும் தேர்வுதான் என்று பெற்றோருக்கு எழுதப்பட்ட பள்ளி முதல்வரின் கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவின் தமாம் நகரில் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. சிபிஎஸ்இ பள்ளியான இதன் முதல்வராக சுபைர் அஹ்மது கான் என்பவர் பணியாற்றி வருகிறார்.

அங்குள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி முதல்வர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. கடிதத்தில் அப்படி என்ன கூறப்பட்டிருக்கிறது?

''பொதுத் தேர்வுகள் தொடங்கப் போகின்றன. உங்கள் குழந்தை நன்றாக எழுத வேண்டும் என்று பதற்றத்துடன் இருப்பீர்கள் என்று தெரியும். எனினும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கலைஞர் ஆகப்போகும் மாணவனுக்கு கணிதம் தேவையில்லை. தொழில்முனைவோருக்கு வரலாறோ ஆங்கில அறிவோ அத்தியாவசியமில்லை. வேதியியல் மதிப்பெண்கள் இசைக் கலைஞனுக்கு அவசியமில்லாத ஒன்று.

உங்களின் குழந்தை அதிக மதிப்பெண்கள் பெற்றால், அருமை. ஒருவேளை பெறவில்லை என்றால், அவர்களின் தன்னம்பிக்கையையும் கண்ணியத்தையும் பிடுங்கி விடாதீர்கள். ''பரவாயில்லை, இது வெறும் தேர்வுதான்!'' என்று சொல்லுங்கள்.

வாழ்க்கையில் இதை விடப் பெரிய நிகழ்வுகள் இருப்பதாகச் சொல்லுங்கள். ''அவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. அவர்களை எப்போதும் நேசிப்போம்; மதிப்பெண்களை வைத்து அவர்களை எடைபோட மாட்டோம்'' என்று சொல்லுங்கள்.

ஒரு தேர்வோ, குறைந்த மதிப்பெண்ணோ அவர்களின் கனவுகள் மற்றும் திறமையைப் பறித்துவிட முடியாது. அதேபோல பெற்றோர்களே, மருத்துவர்களும் பொறியாளர்களும் மட்டுமே உலகில் மகிழ்ச்சியான மனிதர்கள் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்'' என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x