Published : 20 Jan 2020 08:35 AM
Last Updated : 20 Jan 2020 08:35 AM

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 12 சிறிய செயற்கைகோள் பலூன் மூலம் ஏவப்பட்டன: உயர்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு

விண்வெளி ஆய்வை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி பாராட்டுக்குரியது என்று குறைந்த செலவில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 12 செயற்கைக்கோள்கள் பலூன் மூலம் ஏவும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக விளையாட்டரங்கில் பள்ளி மாணவர்கள் சார்பில் பலூன் மூலம் 12 சிறிய செயற்கைக்கோள்கள் ஏவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம், தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 12 பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். கவுரவ விருந்தினராக தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செயற்கைக்கோள்கள் அடங்கிய பலூனை பறக்கவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிகழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தற்போது, அது சாத்தியமாகியுள்ளது’’ என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, ‘‘தமிழகம் உயர் கல்வியில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதுடன் பல ஐரோப்பிய நாடுகளின் தரத்துக்கு உயர்ந்துள்ளது’’ என்றார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசம்போது, ‘‘அறிவியல் ஆராய்ச்சியின் உச்சகட்டமாக விண்வெளிஆய்வையும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும்இந்த முயற்சி பாராட்டுக்குரியது’’ என்றார். நிகழ்ச்சியில் விஐடிபல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், பதிவாளர் சத்திய நாராயணன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x