Published : 18 Jan 2020 10:52 AM
Last Updated : 18 Jan 2020 10:52 AM

கொடைக்கானலில் சேதமடைந்த சாலையை தாங்களே முன்வந்து சீரமைத்த பள்ளி மாணவர்கள்

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பள்ளி மாணவர்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வராத நிலையில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் தாங்களே முன்வந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

கொடைக்கானல் ஆனந்தகிரி கூலிகாட் சாலையில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பயன்படுத்தமுடியாதநிலையில் உள்ளன. இதனால் இருசக்கரவாகனத்தில் செல்வோர் மற்றும் நடந்துசெல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நகராட்சி நிர்வாகத்தை நம்பி பலனில்லை என்று முடிவு செய்த பள்ளி மாணவர்கள் தாங்களே களம் இறங்கினர். ஆனந்தகிரி பகுதியில் 7 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளமான சாலையில் கற்களை எடுத்துவந்து நிரப்பி அதில் சாலையோரம் இருந்த மண்ணைவெட்டி எடுத்து நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறுவயதிலேயே பொதுப்பிரச்சனையில் தீர்வு காண முன்வந்த மாணவர்களை ஆனந்தகிரி பகுதி மக்கள் பாராட்டினர்.

சாலையை சீரமைத்த மாணவர்கள் கூறுகையில், தினமும் பள்ளி செல்வதற்கு குண்டும் குழியுமான இந்த சாலையை கடந்து தான் செல்கிறோம். எங்களுக்கே நடந்து செல்ல சிரமமாக உள்ளது. முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் நண்பர்களுடன் சாலையை சீரமைக்க நாங்களே முடிவு செய்து இந்த பணியை செய்தோம், என்றனர்.

ஆனந்தகிரி சாலையை நிரந்தரமாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x