Last Updated : 10 Jan, 2020 04:38 PM

 

Published : 10 Jan 2020 04:38 PM
Last Updated : 10 Jan 2020 04:38 PM

உ.பி.யில் மருத்துவ மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள் எடுக்க, அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, அண்மைக் காலமாக மருத்துவர்கள் மோசமாக நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. மருத்துவமனைகளில் மருத்துவர்- நோயாளி இடையே பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து மருத்துவக் கல்வித் துறை, தனது மாணவர்களுக்கு ஆன்மிகப் பாடங்களைக் கற்பிக்க முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்மிக மற்றும் அறநெறி வகுப்புகளை எடுக்க முடிவெடுத்துள்ளன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''அனைத்து எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள் கட்டாயம் ஆக்கப்படும். இதுதொடர்பாக சிறப்பு வகுப்புகளை எடுக்க துறைசார் நிபுணர்கள் அழைத்து வரப்படுவர்.

தியானம் உள்ளிட்ட பிற ஆன்மிக நடைமுறைகள், நோயாளிகளிடம் மருத்துவர்கள் இன்னும் கவனத்துடன் நடந்துகொள்ள உதவும்'' என்று தெரிவித்தார்.

இத்தகவலை மருத்துவக் கல்வி அமைச்சர் சுரேஷ் கண்ணாவும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ''ஏற்கெனவே இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் பேசியுள்ளோம். அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆன்மிக வகுப்புகள் காலை நேரத்திலோ அல்லது மாலை 4 மணிக்கோ நடைபெறும். ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை வகுப்புகள் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து அதன் நேர அளவு நீட்டிக்கப்படும்'' என்று அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x