Last Updated : 09 Jan, 2020 03:25 PM

 

Published : 09 Jan 2020 03:25 PM
Last Updated : 09 Jan 2020 03:25 PM

வெள்ளிக்கிழமை சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாமா, சாப்பிடலாமா?- விரிவான விளக்கம்

இந்த ஆண்டில் முதல் முறையாக நாளை (ஜன.10) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு நேரம் தொடங்கும் கிரகணம், நள்ளிரவு கடந்து அதிகாலை வரை நீடிக்க இருப்பதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த அடிப்படை சந்தேகங்களுக்கு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி விளக்கம் அளித்துள்ளார்.

’’சந்திர கிரகணம் என்றால் என்ன?
நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது சூரிய ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது சூரியன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழு நிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும், அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.

சந்திர கிரகணத்தின் வகைகள்
(1) முழு நிலவு கிரகணம்
(2) பகுதி நிலவு கிரகணம்
(3) புறநிழல் சந்திர கிரகணம்

புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இரு வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். முழு நிலவு மறைப்பு என்பது புவியின் கரு நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும்போது ஏற்படுகிறது. இது அரிதாக ஏற்படும் நிகழ்வாகும். முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் சூரிய ஒளியைப் புவி முற்றிலும் தடுக்கிறது.

பகுதி நிலவு மறைப்பு என்பது நிலவின் ஒரு பகுதி மட்டும் கரு நிழலிற்குள் நுழைவதால் ஏற்படும் நிகழ்வாகும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல், பகுதியளவு நேர்கோடாக வந்ததால் பகுதி நிலவு மறைப்பு நிகழ்கிறது.

புற நிழல் நிலவு மறைப்பு என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் மேற்பகுதி இருண்டு காணப்படும். புவியின் புற நிழலிற்குள் நிலவு முழுமையாகக் கடந்து செல்லும் போது புற நிழல் கிரகணம் ஏற்படுகிறது. இது மிக அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது கருநிழலுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.

முழு நிலவு மறைப்பு பிரமிக்க வைப்பதாய் இருக்கும். பகுதி நிலவு மறைப்பு பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் புறநிழல் கிரகணம் மற்ற சந்திர கிரகணம் போலில்லாமல், உற்று நோக்கினால் மட்டுமே தெரியக் கூடியதாக இருக்கும்.

எங்கெல்லாம் கிரகணம் தெரியும்?
இந்தக் கிரகணம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல நாடுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தெரியும். அமெரிக்காவில் ஜனவரி மாத நிலவை ஓநாய் நிலவு என்பர். இதனால் இந்த கிரகணத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் “ஓநாய் நிலவு கிரகணம்” என்கிறது. ஜனவரி 10-ல் ஏற்படும் கிரகணம் ஒரு புறநிழல் கிரகணம். இதில் சுமார் 90% நிலவுப் பகுதி, பூமியின் புறநிழல் வழியாகப் பயணிக்கும்.

எப்போது தொடங்கும்?
கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடிக்கவிருக்கும் இந்த கிரகணம் புதுவையில் இரவு 10.37 மணிக்கு ஆரம்பிக்கும். படிப்படியாக நிலவின் மீது பூமியின் நிழல் படர்ந்து நள்ளிரவு 12.40 மணிக்கு முழு கிரகணத்தை எட்டும். பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து 2.42 மணிக்கு முழுவதுமாக கிரகணம் முடிவுக்கு வரும்.

மீண்டும் எப்போது கிரகணம் ஏற்பட உள்ளது?
இந்த கிரகணம் இவ்வாண்டு ஏற்படவிருக்கும் நான்கு சந்திர கிரகணங்களில் முதலாவது ஆகும். ஜுன் 5, ஜுலை 4, நவம்பர்29 ஆகிய தேதிகளில் மற்ற மூன்று கிரகணங்கள் ஏற்படவிருக்கின்றன. இதில் ஜுன் 5 கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காணமுடியும்.

வெறும் கண்களால் கிரகணத்தைப் பார்க்கலாமா?
உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய சூரிய கிரகணம் போல் இல்லாமல், புவியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் சந்திர கிரகணத்தைக் காண முடியும். சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் சூரிய கிரகணம் போலில்லாமல் சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும். மேலும் சூரிய கிரகணம் போலில்லாமல் சந்திர கிரகணத்தை எந்தவொரு பாதுகாப்புக்கருவிகளும் இன்றி வெறும் கண்களால் காண இயலும்.

சந்திர கிரகண வேளையில் உணவு அருந்தலாமா?
நாளை தென்படும் சந்திர கிரகணத்தை அனைவரும் நேரடியாகத் தங்களின் கண்களால் பார்க்கலாம். பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாகவும் இதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.அது எப்படி உடலுக்கு எந்த பாதிப்பும் அளிக்காதோ அதுபோலத் தான் உணவு அருந்துவதும் பாதிப்பை ஏற்படுத்தாது. கிரகண வேளையில் உணவு அருந்தலாம். இதனால் எந்த கெட்ட விளைவும் ஏற்படாது. ஏனெனில் எவ்விதக் கதிர்களும் சந்திர கிரகணத்தின் போது புறப்பட்டு வருவதில்லை’’.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x