Published : 08 Jan 2020 11:59 AM
Last Updated : 08 Jan 2020 11:59 AM

குட்டிக் கதை 19: மிமிக்ரி முயல்!

“அம்மா, என் ஃப்ரண்ட் வந்திருக்கான், சாப்பிட ஏதாவது கொண்டு வர்றீங்களா?”

“உனக்கு நண்பன்னு யாருமே கிடையாதே, அது யாரு புது ஃப்ரண்ட்?”

“பிங்கின்னு ஒருத்தனை போன வாரம் சந்திச்சேன், அவன் ரொம்ப நல்லவன்மா, அறிவாளி. அது இல்லாம அவன் பல குரல்ல கூட பேசுவான், இப்போ நம்ம சிங்க ராஜா மாதிரி கர்ஜிக்க சொல்ரேன் பாரு” என்று கூறியவுடன் உண்மையிலேயே சிங்கம் கர்ஜிப்பது போலவே சத்தம் கேட்டது. யாரு இவ்வளவு நல்லா மிமிக்ரி பண்றதுன்னு பார்க்க வெளியே வந்தாள் அம்மா. அந்த புது நண்பனை பார்த்ததும் கோபத்தோடு உள்ளே போய் விட்டாள்.

நண்பனை அனுப்பி விட்டு உள்ளே வந்து “என்னம்மா நீ, எதுவும் சொல்லாம கோபத்தோடு உள்ளே வந்திட்ட, அப்படி என்ன கோபம்?”

“நாம யாரு, அவன் யாருன்னு யோசிக்க மாட்டியா?” என்று கோபமாக கேட்டாள்.

“நாம ஆடு , அவன் முயல், நாங்க நட்பா இருந்தா என்ன தப்பும்மா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, நீ ஆடுங்களோட மட்டும் தான் நட்பா இருக்கணும்” என்று கூறினாள்.

இப்போ எதுவும் சொல்ல வேண்டாம், அப்பறம் பார்த்துக்கலாம் அப்படின்னு நெனச்சி அந்த ஆட்டுக்குட்டி வெளியே விளையாடச் சென்றது.

மறுநாள் காலை விளையாடச் சென்று திரும்பி வந்தது ஆட்டுக்குட்டி. ”அம்மா, அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் அம்மாவைக் காணவில்லை. எங்கே சென்றிருப்பார்கள் என தெரியாததால் ஆட்டுக்குட்டிக்கு அழுகை வந்தது. அப்போது நண்பன் முயல் குட்டி வந்தது. விஷயம் அறிந்து “வருத்தப் படாதே, வா, நாம் இருவரும் சென்று தேடலாம்” என்று கூட்டிச் சென்றது.

காடு, மேடெல்லாம் தேடினர். அப்போது தூரத்தில் இருந்த ஒரு குகைக்குள் இருந்து பேச்சுக்குரல் கேட்டது. ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

“நரியாரே, இப்படி என்னை இந்த குகைக்குள் அடைத்து விட்டீரே, என் மகன் என்னை தேடுவானே.. நீர் செய்வது நியாயமா?”

ஹஹ ஹா!என்று சிரித்துக் கொண்டே “உன் பையன் பள்ளத்துல விழுந்திட்டான். வந்து பாருன்னு நான் சொன்னத கேட்டு ஏமாந்து போய் என்கூட வந்து குகையில மாட்டிக்கிட்டது உன் தப்பு. அதுக்கு நான் என்ன பண்றது? இப்போ நான் போய் சிங்க ராஜாவைக் கூட்டிக்கிட்டு வரப்போறேன். அவர் உன்னைச் சாப்பிட்டு விட்டு என்னைப் பாராட்டுவார். அதுக்காகத் தான் இந்த பிளான் பண்ணேன்”

நரியின் இந்த வார்த்தைகளை மறைந்திருந்து கேட்ட ஆட்டுக்குட்டிக்கு அழுகை வந்தது. “நண்பா, எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல, நான் போய் என் சொந்த பந்தங்களைக் கூட்டிக்கிட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே ஓடியது.

சற்று நேரம் கழித்து அழுதவாறே வந்தது ஆட்டுக் குட்டி. “நண்பா, என் உறவினர்கள் எல்லோரும் சிங்க ராஜாவிற்கு பயந்து உதவி செய்ய வரல. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திட்டேன். அவங்க வரும் போது சிங்கம் வந்திட்டா என்ன பண்றதுன்னு கேக்கறாங்க. இப்போ எப்படி என் அம்மாவை அந்த குகையில் இருந்து வெளியே அழச்சிட்டு வரதுன்னு புரியல” என்று கதறி அழுதது.

அப்போது திடீரென்று ஒரு மரத்திற்குப் பின் இருந்து அம்மா ஆடு வெளியே வந்தது. இதைப் பார்த்த ஆட்டுக்குட்டிக்கு இன்ப அதிர்ச்சி.

“எப்படி மா, தப்பிச்சி வந்த?”

“இதுக்கெல்லாம் காரணம் உன் நண்பனோட திறமை தான். அவனாலதான் நான் உயிர் பொழச்சேன் “

“என்னம்மா, ஒரே சஸ்பென்சா இருக்கு, என்ன நடந்ததுன்னு சீக்கிரம் சொல்லு மா”

“நரி என்கிட்ட பேசிட்டு சிங்கத்தைக் கூட்டி வர கெளம்புச்சு, அப்போ தூரத்துல இருந்து ஒரு சிங்கத்தோட குரல் கேட்டது. ‘நரியே, நீயும் அந்த ஆடும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டுதான் வருகிறேன். என்ன இது, இப்படி எல்லாம் சூழ்ச்சி செய்து எனக்கு இரை தர வேண்டாம். உடனே நீ அந்த ஆட்டை விடுவித்து விட்டு என்னை வந்து பார்’ என்று கோபமாக கூறியது. அதைக்கேட்ட நரி ‘மன்னியுங்கள் மன்னா, நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்’ என்று கூறி குகையை மூடி இருந்த பாறையை நகர்த்தி விட்டு சென்றது. நானும் தப்பித்தேன்” என்று அம்மா ஆடு கூறியது.

“அது சரி, என் நண்பன் உதவி செய்தான்னு சொன்னயே, எப்படி?”

இதைக் கேட்டு முயல் குட்டியும் அம்மா ஆடும் சிரித்தன.

“சிங்கம் உண்மையிலேயே வந்து இதை சொல்லி இருக்கும்னு நினைக்கறயா? அதுதான் இல்லை, உன் நண்பன்தான் மிமிக்ரி செய்து சிங்கம் மாதிரி பேசி என்னை காப்பாத்தினான்” என்று கூறி முயல் குட்டியைப் பார்த்து “என்னை மன்னிச்சிடு, உன்னை நான் வேற்றுமையா நினைச்சேன். என் சொந்தங்கள் உதவாத போது நீ உதவி செய்து என்னை காப்பாத்தியதுக்கு ரொம்ப நன்றி” என்றது அம்மா ஆடு.

அதற்கு பிறகு மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நீதி : யாரிடமும் வேற்றுமை பார்த்து அவர்களை ஒதுக்கக் கூடாது.

- கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x