Published : 06 Jan 2020 05:04 PM
Last Updated : 06 Jan 2020 05:04 PM

1000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச காலை உணவு: தஞ்சாவூரில் தொடக்கம்

தஞ்சாவூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10, 11 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (ஜன.6) காலை தொடங்கியது.

கடந்த 5 ஆண்டுகளாக ஜனவரி முதல் மார்ச் வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் திட்டம் சேவாலயா என்னும் அறக்கட்டளையால் செயல்படுத்தப்படுகிறது. 6-வது ஆண்டாக இந்த முறை Petrofac நிறுவனத்தின் உதவியுடனும், மற்ற தனிப்பட்ட நன்கொடையாளர்களின் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் பேசும்போது, ''மாணவிகள் வகுப்பறையில் நன்கு கவனம் செலுத்த, காலை உணவு மிகவும் முக்கியமானது. பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்காக காலை 7 மணிக்கே பள்ளிக்கு வருவதால் காலை உணவு சாப்பிடாமல் வருகிறார்கள். இது அவர்களது உடல்நலன் மற்றும் கற்கும் திறனைப் பாதிக்கும். இதைப் போக்க சேவாலயா தொண்டு நிறுவனம் செய்து வரும் இந்த அரிய சேவையைப் பாராட்டுகிறேன். மாணவிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் நன்கு கவனம் செலுத்தி நன்மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

சமூக நலத் துறை அலுவலர் ராஜேஸ்வரி, ''சத்தான உணவு உட்கொண்டு மாணவிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நன்கு படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

மாணவியருக்கு சூடான, சுவையான வெண்பொங்கல் மற்றும் அசோகா அல்வா காலைச் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. முன்னதாக, தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கினார். சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முரளிதரன், சேவாலயாவின் செயல்பாடுகள் பற்றிப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x