Published : 01 Jan 2020 04:41 PM
Last Updated : 01 Jan 2020 04:41 PM

முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் முதலிடம்: முன்னாள் ஐடி ஊழியர் அர்ச்சனா சாதனை!

முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்து முன்னாள் ஐடி ஊழியர் அர்ச்சனா சாதனை படைத்துள்ளார்.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (தொகுதி – 1 பணிகள்) 181 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது.

இத்தேர்வுக்கு தகுதியான 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வு 03.03.2019 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

முதன்மை எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363 விண்ணப்பதாரர்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்றது.

நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான நேற்று, கலந்துகொண்ட தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் முதல் 10 இடங்களில் 8 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். இதில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பெண் அர்ச்சனா, முதல் முறையாகத் தேர்வு எழுதியவர் ஆவார்.

சிவகங்கையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா, சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றினார். 7 ஆண்டுகள் பணியாற்றிய அவர், அரசுப் பணி மீதான காதலால் வேலையை விட்டார்.

திருமணமாகி இருந்தாலும் தீவிரமாகப் படிப்பில் கவனம் செலுத்தினார் அர்ச்சனா. கடின உழைப்பின் பலனாக முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சார் ஆட்சியராக உள்ளார் அர்ச்சனா. இதுகுறித்துப் பேசும் அவர், ''ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 மணி நேரம் ஆர்வத்துடன் படிப்பேன். சில நாட்கள் அதைத் தாண்டியும் படிக்க வேண்டியது இருக்கும்.

வேலையை விட்டுவிட்டுப் படித்ததால் முழுமையான கவனத்துடன் படிக்க முடிந்தது. சார் ஆட்சியர் ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் கனவு இருந்தது. ஆனால் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்கு அம்மா, அப்பா, கணவர், பயிற்சி நிறுவனத்தின் ஊக்கமே காரணமாக அமைந்தது'' என்கிறார் அர்ச்சனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x