Published : 28 Dec 2019 03:16 PM
Last Updated : 28 Dec 2019 03:16 PM

ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் சீர்திருத்தம்: ஜன.8-ல் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் நிர்வாகப் பணிகளை சீர்திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தலைமையில் சென்னையில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஆங்கிலோ இந்தியப் பள்ளி நிர்வாகத்தினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக ஆய்வாளர், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு தமிழகத்தில் செயல்பட்டு வந்த 33 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிட நிா்ணயம், கல்விக் கட்டண நிா்ணயம், நியமன ஒப்புதல், பொது வருங்கால வைப்பு நிதி, ஆசிரியர் சேமநல வைப்பு நிதி, ஓய்வூதியப் பலன்கள், ஊதிய நிர்ணயம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்ற பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் தேக்கநிலை உள்ளதாக ஆங்கிலோ இந்திய பள்ளிகள் சங்கத் தலைவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை சீரமைப்பது குறித்து, ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் முதல்வர், தாளாளர், மாவட்டக் கல்வி அலுவலர் கூட்டம் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் முதல்வர், தாளாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், முதன்மைக் கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் பள்ளிகள் சார்ந்த விவரங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x