Published : 27 Dec 2019 08:11 AM
Last Updated : 27 Dec 2019 08:11 AM

அண்ணா பல்கலை. இணைப்பில் உள்ள தன்னாட்சி அங்கீகாரம் பெற அதிக ஆர்வம்: அடுத்த ஆண்டில் 12 கல்லூரிகள் தன்னாட்சி பெற வாய்ப்பு

கோப்புப்படம்


சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அடுத்த ஆண்டில் 12 கல்லூரிகள் தன்னாட்சி பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகள் என்று அழைக்கப்படும். இக்கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு கேள்வித்தாள்கள் உருவாக்குதல், விடைத்தாள்கள் திருத்தம், பாடத்திட்டம் உருவாக்குதல் போன்ற எல்லா வேலைகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து, தேர்வு முடிவுகளையும் வெளியிடும்.

ஆனால், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகள் மேற்கண்ட வேலைகளை சுயமாகசெய்யும் அதிகாரம் படைத்ததாகும். தன்னாட்சி கல்லூரிகளின் மேற்கொள்ளும் நடைமுறைகளில் ஏதேனும் சந்தேகமோ அல்லது புகாரோ வந்தால் மட்டுமே, அண்ணா பல்கலை. சார்பில் கண்காணிப்பு குழு ஆய்வு செய்யும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது இயங்கும் தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அண்ணா பல்கலை. வழியாக விண்ணப்பிக்கவேண்டும்.

இதனையடுத்து, யுஜிசியின் 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவானது, மாநில பிரதிநிதி (அண்ணாபல்கலை. அல்லது உயர்கல்வித்துறை) ஒருவரை இணைத்துக் கொண்டு, விண்ணப்பித்த கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளும்.

பல்வேறு நிபந்தனைகள்

தன்னாட்சி அங்கீகாரம் பெற விரும்பும் கல்லூரிகள் தொடங்கி, குறைந்தது 10 ஆண்டுகளாவது செயல்பட்டு வரவேண்டும். அதேபோல், 4 ஆண்டுகள் அனுபவமுள்ள பேராசிரியர்கள், கல்லூரியின் தரத்தை நிர்ணயம் செய்யக்கூடிய தேசிய தர நிர்ணய சான்றுமையத்திடம் கல்லூரியின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புக்காக ‘ஏ’சான்று ஆகியவை பெற்றிருக்கவேண்டும். தன்னாட்சிக்காக விண்ணப்பித்த பின்னர், 5 ஆண்டுகளுக்கு தேர்ச்சி வீதம் மற்றும்மாணவர் சேர்க்கை 60 சதவீதத்துக்கு குறையக்கூடாது என்பன உள்ளிட்ட பல விதிகள் உள்ளன.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் 8 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 52-ஆக உள்ளது.

கல்லூரிகள் விண்ணப்பிப்பு

இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னாட்சி அங்கீகாரம் பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றன. இந்த கல்லூரிகளில் யுஜிசியின் வல்லுநர் குழுஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இதனால், 2020-21-ம் கல்வியாண்டில் சுமார் 12 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இணைப்பு பெற தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், பல்கலை. இணைப்பு பெறுவதை விட, தன்னாட்சி அங்கீகாரம் பெறவே அதிகம் விரும்புகின்றன. ஏனென்றால், பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆர்வம் கடந்த ஆண்டுகளில் குறைந்துவிட்டன.

இதனால், பொறியியல் படிப்பில் நடப்பு ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. ஆனால், தன்னாட்சி கல்லூரிகளில் படித்தால், சுலபமாக தேர்ச்சி பெற்று விடலாம் என்றும் விரைவில் வேலை கிடைத்துவிடும் என்றும் பெற்றோரும், மாணவர்களும் கருதுகிறார்கள்.

இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு சரிவை சந்தித்தாலும், தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. இதனால், நடப்பாண்டிலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால், இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார் கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x