Last Updated : 17 Dec, 2019 03:24 PM

 

Published : 17 Dec 2019 03:24 PM
Last Updated : 17 Dec 2019 03:24 PM

பொறியியல், விவசாயம், சட்டம் தொடர்பாக 3 பல்கலைக்கழகங்கள்: புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் விரைவில் பொறியியல், விவசாய, சட்டப் பல்கலைக்கழங்கள் அமைய உள்ளதாகவும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி தொடங்க உள்ளோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சிஐஐ சார்பில் ஸ்டார்ட்அப் மாநாடு நடந்தது. இந்நிகழ்வில் புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி மையத்தை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

''உயர் கல்வியில் புதுச்சேரி, நாட்டிலேயே ஆறாம் இடத்தில் உள்ளது. கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகமாக்க உள்ளோம். அதேபோல் விவசாயம், மீன்வளர்ப்பு, கால்நடை அடங்கிய விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. புதுச்சேரி சட்டக் கல்லூரியை சட்டப் பல்கலைக்கழகமாக்க உள்ளோம்.

அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி கொண்டு வர உள்ளோம். இளையோர் சொந்தத் தொழில் தொடங்க ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வந்துள்ளோம். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி மையம் அமைத்துள்ளது போல் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைக்க வேண்டும்.

மாணவர்கள் தொழில் தொடங்க கடனுக்காக வங்கிகளை அணுகினால் அவர்களுக்குத் தொல்லை ஏற்படுகிறது என்பது உண்மை. குறிப்பாக லட்சக்கணக்கில் கடன் பெறுவதுதான் சிரமமாக உள்ளது. கோடிக்கணக்கில் கடன் பெற்று வெளிநாடு செல்வோருக்குத் தாராளமாகத் தருகின்றனர்.

தொழில் தொடங்கக் கடன் கேட்டு வங்கிக்குச் சென்றால் வாழ்க்கையே வெறுத்துவிடும் சூழல் உள்ளது. இளையோரை ஊக்குவியுங்கள். அரசு உயர் அதிகாரிகளும் மாற வேண்டும். மக்கள் பணி செய்யத்தான் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாதச் சம்பளம் பெறும் உயரதிகாரிகள், வங்கி அதிகாரிகள், இளையோர் வாழ்வில் முன்னேற ஏதுவான சூழலை உருவாக்கித் தர வேண்டும்''.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x