Published : 16 Dec 2019 05:55 PM
Last Updated : 16 Dec 2019 05:55 PM

ஜாமியா பல்கலை. வன்முறை எதிரொலி: ஏஎம்யூ, லக்னோ கல்லூரி ஜன.5-ம் தேதி வரை மூடல்

ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் எதிரொலியாக ஏஎம்யூ, லக்னோ கல்லூரி ஆகியவை ஜனவரி 5-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஏராளமான மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் லக்னோ தாருல் உலூம் நட்வத்துல் உலமா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாமியா மிலியா மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே லக்னோ மாணவர்கள் இன்று காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கும் ஜன.5 வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே லக்னோவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்துக்கும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x