Last Updated : 16 Dec, 2019 02:55 PM

 

Published : 16 Dec 2019 02:55 PM
Last Updated : 16 Dec 2019 02:55 PM

வளாகத்தில் காவல்துறை நுழைந்ததை சகிக்க முடியாது; உயர்மட்ட விசாரணை தேவை: ஜாமியா பல்கலை. துணைவேந்தர்

ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸார் நடந்துகொண்டது குறித்து, மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா டிசம்பர் 9-ம் தேதியன்று லோக் சபாவிலும் டிசம்பர் 11-ம் தேதியன்று ராஜ்ய சபாவிலும் கடும் விவாதங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாக மாறியிருக்கிறது.

மதச்சார்பின்மை நாடாக அறியப்படும் இந்தியாவை, மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டாம் என குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, அசாம், குவாஹாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பஸ்கள், 2 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூடியது. அதைத் தொடர்ந்து பல்கலை. துணை வேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, ''என்னுடைய மாணவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருப்பது குறித்து மிகுந்த வேதனைப்படுகிறேன். எந்தவித அனுமதியும் இல்லாமல், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்திருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காவல்துறையின் கொடூர நடவடிக்கைகள் மூலம் எங்களின் மாணவர்களை பயமுறுத்தி உள்ளனர்.

இந்தக் கடினமான சூழலில் மாணவர்கள் தனியாக இல்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். நான் அவர்களுடன் இருக்கிறேன்.

காவல்துறையினர், பல்கலைக்கழக சொத்துகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய உள்ளோம். எங்களுக்கு உயர் மட்ட விசாரணை வேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் இதுகுறித்த விவரங்களை அளிக்க உள்ளேன். ஏற்கெனவே துறைச் செயலரிடம் நிலைமை குறித்து விரிவாகப் பேசியுள்ளேன்.

சேதமடைந்த பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. நடந்த சம்பவம் குறித்து அரசியல்வாதிகளுடன் பேசப் போவதில்லை. அவர்களைப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே அனுமதிக்க மாட்டோம்.

மாணவர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளித்துள்ளோம். எனினும் இங்கேயே தங்க விரும்புவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும்'' என்று துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x