Published : 03 Dec 2019 05:11 PM
Last Updated : 03 Dec 2019 05:11 PM

செல்போனிலேயே மூழ்கும் மாணவர்கள்; பெற்றோர் கண்காணிக்க வேண்டும்: சைலேந்திர பாபு அறிவுரை

சென்னை

24 மணிநேரமும் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்களை, பெற்றோர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மொபைல் போன் மிகவும் நல்ல சாதனம்தான். அது தொலைதொடர்புக்குப் பயன்படுகிறது. அதில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. அதே நேரத்தில் செல்போன் மூலமாக குற்றங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு. செல்போனைத் தவறாகப் பயன்படுத்தும்போது பணம் போய்விடும். மானமும் போக வாய்ப்புண்டு.

மாணவர்களைப் பொறுத்தவரை, வேலைக்காக அவர்கள் ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அவர்கள் போனைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் 24 மணிநேரமும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பது, அவர்கள் கல்வி கற்பதற்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட அளவு செல்போனைப் பயன்படுத்துவது நல்லது. அளவுக்கு மீறி, செல்போனைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், பெற்றோர் உடனே விசாரிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூற வேண்டும்.

பப்ஜி போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன. சிறுவர்களை ஈர்த்து, இழுத்து நிரந்தரமாக அவர்களை விளையாட்டில் ஈடுபட வைத்து 24 மணிநேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்கச் செய்யும் விளையாட்டுகள் இருக்கின்றன.

இவை மிகவும் ஆபத்தானவை. கண்களைப் பாதிக்கும். மூளையைப் பாதித்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்காலத்தையே பாதித்துவிடும் என்பதால் மாணவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது'' என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x