Published : 02 Dec 2019 11:07 AM
Last Updated : 02 Dec 2019 11:07 AM

நதிகள் பிறந்தது நமக்காக! 7- வங்கம் செல்லும் வற்றாத நதி!

இந்தியாவின் வட கிழக்கே, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அசாம் மற்றும் அண்டை நாடான வங்க தேசத்துக்குள் செல்கிற ஜீவ நதி பராக் (Barak).

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 'லியாய் கூலன்' (Liyai Kullen) கிராமத்தில் 'பௌமை நாகா' பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். இங்குதான் உற்பத்தி ஆகிறது 'பராக்'. உள்ளூரில் இந்த ஆறு, 'வோரி' (Vourei) என்று அழைக்கப் படுகிறது.
தொடக்கத்திலேயே, பல நீரோடைகள் இதில் வந்து சேர்கின்றன. மேற்கு நோக்கிப் பாயும் பராக், நாகாலாந்து எல்லை, அசாம் வழியே ஓடி, ’பங்கா பஜார்' என்னும் இடத்தில், அண்டை நாடான வங்க தேசத்துக்குள் நுழைகிறது. இங்கு சுர்மா மற்றும் குஷியாரா என்று இரண்டு நதிகளாக பிரிகிறது. இதன் மொத்த நீளம் 900 கி.மீ. இந்திய எல்லைக்குள், 524 கி.மீ.

சோனாய், டூட்ரியல் (Tuitrial), ஜிரி (Jiri), லேங் (Tlang), லொங்கால் (Longal) மற்றும் மதுரா (Madhura) ஆகியன பராக் நதியின் கிளை ஆறுகள் ஆகும். வழியில், துவாய் (Tuivai), ஜிரி, பத்மா ஆகிய ஆறுகள் இதனோடு கலக்கின்றன. பராக் நதி, வங்கதேசத்தில் சுர்மா என்றும், வங்கக் கடலைச்சேரும் கடைமடைப் பகுதியில், மேக்னா (Meghna) என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லுயிர் பெருகும் நதி

லாக்கிபூரில் இருந்து பங்கா வரை உள்ள 120 கி.மீ. நீளத்துக்கு பராக் நதி, தேசிய நீர்ப்பாதை (National Waterway) என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2000-துக்கும் அதிகமான மீன் வகைகள், ஆற்று முதலைகள், 'சியாமிஸ்' என்னும் அரிய வகை முதலைகள், 'சுஸு' எனும் டால்பின்கள் உள்ளிட்ட பல்லுயிர்கள், இந்த நதியில் வாழ்கின்றன.

'வர்ஸீ' (Varzea) எனும் மழைக்காடு, 'லாஸ் இலம்ஜா' (Los Ilamjao) எனும் பசுமை நிலம், இந்த நதியை ஒட்டி உள்ளன. அசாம் மாநிலம் தெற்குப் பகுதியில், 'பராக் சமவெளி' (Barak Valley) 6922 ச.கி.மீ. பரப்பளவு கொண்டு உள்ளது.

இதை ஒட்டியுள்ள குன்றுகளில் இருந்து மழைக் காலங்களில் ஓடி வரும் நீரால், இந்த ஆறு நிரம்பி, வெள்ளம் ஏற்படுகிறது. இதன் ஆற்றுப்படுகைகளில் உள்ள மண், சிவப்பு, மஞ்சள் வகையைச் சார்ந்தது. அசாம் அரசு நீர்வளத் துறையின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி இந்தியாவில் மொத்தம் உள்ள விளை நிலங்களில் 0.5 சதவீதம் இந்த நதியோடும் பாதைகளில் உள்ளன.

அசாமில், 2017-ம் ஆண்டு முதல், 'நமாமி பராக்' எனும் பெயரில் ஆற்றுத் திருவிழா பராக் சமவெளியில் 'சில்சார்' பகுதியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. மூன்று நாள் விழாவில், வணிகம், கலாச்சாரம், பாரம்பரியம் முக்கிய இடம் வகிக்கின்றது. 'பராக்' ஆறும், மாசுபடும் ஆபத்தில் உள்ளது. இந்திய வங்கதேச எல்லையில் இருக்கும் 'திபய்முக்' ((Tipaimukh) அணைக்கட்டு, இரு நாடுகளுக்கு இடையே சிக்கலாக வளர்ந்து வருகிறது. ஆறுகள் இணைக்கும் நிலங்கள், மனித மனங்களால் பிரிக்கப்படாமல் இருக்கட்டும்!

(தொடர்வோம்)

கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x