Published : 30 Nov 2019 11:00 AM
Last Updated : 30 Nov 2019 11:00 AM

59 துப்புரவுப் பணியாளர்கள் பணிக்கு பட்டதாரிகள் உட்பட 5,200 பேர் போட்டி

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நடத்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கான 3 நாள் நேர்காணல் நேற்று நிறைவடைந்தது. விண்ணப்பித்த 7,300 பேரில் 5,200 பேர் பங்கேற்றதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகரில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் 4,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் கிரேடு -1 பிரிவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கல்வித் தகுதியாக தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஏறத்தாழ 7,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. மூன்று நாட்களும் தலா 2,200 முதல் 3,000 பேர் வரை அழைக்கப்பட்டனர்.

கடந்த 3 நாட்களாக நடந்த நேர்காணலில், 5-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமின்றி, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள், மாநகராட்சியில் முன்னரே பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

‘‘நேர்காணலில் வேலை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் பட்டதாரிகள் எவ்வளவு பேர் என உறுதியாக கூற முடியாது. ஆனால், ஏறத்தாழ மொத்த விண்ணப்பதாரர்களை ஒப்பிடும்போது, சரி பாதி பேர் பட்டதாரிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எஸ்சி, எஸ்டி சாதிப்பிரிவுகள் மட்டுமின்றி, பிசி, எம்பிசி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். தற்போது விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது’’ என்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

பங்கேற்ற பட்டதாரிகளில் சிலர் ‘இந்து தமிழ்’ நிருபரிடம் பேசும்போது, ‘‘துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு ஆர்வத்துடனே விண்ணப்பித்தோம். எந்த தொழிலும் பாகுபாடு கிடையாது. தற்போது குப்பை சேகரிப்பில் நவீன முறைகள் வந்துள்ளன. வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்க தயாராக உள்ளோம்’’ எனத் தெரிவித்தனர்.

‘துப்புரவுப் பணியாளர் பணியிட பெயரில் மாநகராட்சிப் பணியில் சேர்ந்து, பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தால், அதை காரணம் காட்டி, அலுவலக உதவியாளர், எழுத்தர், கணிப்பொறி பராமரிப்பாளர் போன்ற மாற்றுப் பணிக்கு சென்று விடலாம். எனவேதான் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடத்துக்கு அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்’’ என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x