Last Updated : 28 Nov, 2019 12:54 PM

 

Published : 28 Nov 2019 12:54 PM
Last Updated : 28 Nov 2019 12:54 PM

2 தகுதித் தேர்வுகள்; தோல்வியடையும் ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு: ம.பி.யில் முடிவு

போபால்

இரண்டு தகுதித் தேர்வுகளில் தோல்வியடையும் பள்ளி ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி கூறும்போது, ''கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாநிலப் பாடத்திட்டத்தில் என்சிஇஆர்டி புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த கல்வியாண்டில் இருந்து இது அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் போட்டித் தேர்வுகளில் அனைத்துப் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட முடியும்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக மோசமான தேர்ச்சி விகிதத்தை அளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தகுதித் தேர்வும் நடத்தப்பட்டன. அதில் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

முதல் தேர்வில் தோல்வியடைந்த பிறகும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை தகுதித் தேர்வெழுத அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதிலும் அவர்கள் தோல்வியடைந்தால், கட்டாய ஓய்வு வழங்கப்படும்.

அவர்கள் 50 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும் சரி, இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தாலும் சரி. ஓய்வு கட்டாயம் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது'' என்று பிரபுராம் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 1,57,813 பள்ளிகள் உள்ளன. இதில் 1,20,249 பள்ளிகளை அரசு நடத்துகிறது. 37,564 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x