Published : 28 Nov 2019 10:19 AM
Last Updated : 28 Nov 2019 10:19 AM

தேர்வுக்குத் தயாரா? - இடைத்தேர்வில் இருந்து பாடம் கற்போம்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

அன்றாடம் நடைபெறும் வகுப்புத் தேர்வோ அல்லது ஆண்டு இறுதியில் காத்திருக்கும் பொதுத்தேர்வோ, தேர்வுகள் எதுவாயினும் மாணவர்கள் முனைப்புடன் அவற்றுக்குத் தயாராக வேண்டும். தேர்வுகள் வருவது நமக்கு சிரமம் தந்து சோதிப்பதற்கு அல்ல.

நம்மை பட்டை தீட்டி, புடம் போட்டுத் தகதகவென ஜொலிக்க வைக்கவே வருகின்றன. இப்படி நமக்கான நல்வாய்ப்புகளாக தேர்வுகளை அணுக தொடங்கினால், அவற்றை எதிர்கொள்வதில் தயக்கங்கள் அகன்று தனி சுவாரசியம் கூடிவரும்.

தொலையும் மதிப்பெண்கள்

தேர்வுக்கு முன்பாக நாம் படிப்பதில் செலவிடும் உழைப்பு மொத்தமும் விடைத்தாளில் வெளிப்படுவதில்லை. ’நூற்றுக்கு நூறு எடுப்பேன்..’ என்று தேர்வெழுத செல்லும் மாணவர், திரும்பும்போது ’90 மார்க் மட்டுமே கிடைக்கும் போல..’ என்று புலம்புவார். திருத்திய விடைத்தாளை ஆசிரியர் வழங்கும்போது, மாணவர் கணித்த மதிப்பெண் மேலும் குறைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

விழுந்துப் படித்தும் அந்த மதிப்பெண்கள் எல்லாம் விடைத்தாளில் ஒட்டாது, இடையில் எங்கே தொலைந்து போயிருக்கும்?. படிப்பதற்கும் தேர்வில் எழுதுவதற்கும் இடையே நிறைய பள்ளங்கள் உண்டு. அலட்சியம், பதட்டம், எழுதிப் பார்க்காதது, எழுத்துப் பிழைகள், கவனக்குறைவால் மாற்றி எழுதுவது என அந்தப் பள்ளங்களில் பல மதிப்பெண்கள் விழுந்து தொலைந்து போகின்றன. படித்ததை அப்படியே சிந்தாது சிதறாது மதிப்பெண்களாக அள்ள வேண்டுமா? ஆம் எனில், அதற்கு எழுதிய தேர்விலிருந்து நாம் பாடம் கற்கத் தயாராக வேண்டும்.

தவறுகளை நொறுக்கும் பட்டியல்

தேர்வு முடிந்ததும் அதில் குறைய வாய்ப்புள்ள மதிப்பெண்கள் பற்றி நாம் அதிகம் யோசிப்பதில்லை. அடுத்த பாடத்தை படிப்பது, அடுத்த தேர்வுக்குத் தயாராவது என்று பறப்போம். சற்று நேரம் ஒதுக்கி எழுதிய தேர்வ மனத்திரையில் ஓடவிட்டால், நமது தனிப்பட்ட தவறுகளை அடையாளம் காணலாம். அவற்றை குறித்து வைத்து அடுத்தத் தேர்வுகளில் அந்தத் தவறுகளை கவனமாக தவிர்த்தால் போதும்.

மதிப்பெண்கள் காணாமல் போவதை இம்முறை தவிர்த்து விடலாம். உதாரணமாக, ’தமிழ் பாடத்தில் நன்றாய் படித்திருந்தும் எழுத்துப் பிழைகள் ஏராளமாய் வருவது, ஆங்கிலத்தில் Vowel எழுத்துக்களில் மயங்கி மாற்றி எழுதுவது, கணக்குகளைத் தீர்க்கும்போது சூத்திரங்களில் குழப்பம் நேரிடுவது, அறிவியலில் பயிற்சி போதாமல் வரைந்த படங்கள் நேரத்தை விழுங்குவது,..’ இப்படி தனிப்பட்ட தவறுகள் மற்றும் தடுமாற்றங்களை அடையாளம் காணலாம்.

பின்னர் அவற்றை புரியும்படி குறிப்புகளாக தொகுத்து, ஒரு பட்டியலில் வரிசைப்படுத்தலாம். இந்த பட்டியலை நாம் வழக்கமாக அமர்ந்து படிக்கும் இடத்தில் கண்ணில் படுமாறு வைத்தால் போதும். அடுத்த தேர்வில் ஏதோ மாயாஜாலம் நடந்தது போல, தொலையும் மதிப்பெண்கள் பத்திரமாக மீள்வதை அறியலாம்.

விடைத்தாளை ஆராய்வோம்

எழுதி முடித்த தேர்வுகளில் நாமாக உணரும் தவறுகளை விட, அந்தத் தேர்வின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் அதிக தவறுகளை நமக்கு சுட்டிக்காட்டும். ஏனெனில் தவறுகளை அடையாளம் காண்பதில் நம்மை விட நமது ஆசிரியர்களே சிறந்தவர்கள். எனவே திருத்திய விடைத்தாள் கையில் கிடைத்ததும், அக்கம்பக்கத்து மாணவர்களின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு கதை பேசுவதை ஒத்திவைத்துவிட்டு, தன்னுடைய தாளினை முழுமையாக ஆராய்வது அவசியம்.

சில ஆசிரியர்கள் சிவப்பு மையால் தவறுகளை அடிக்கோடிட்டு காட்டுவதோ, அத்தவறு பற்றி குறிப்பெழுதவோ செய்திருப்பார்கள். இவை அனைத்தையும் கவனிப்பதுடன் இழந்த மதிப்பெண் குறித்தும் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, நன்றாய் படித்துச்சென்று எழுதிய ஒரு 5 மதிப்பெண் வினாவுக்கு ஆசிரியர் 4 மதிப்பெண் மட்டுமே அளித்துள்ளார் எனில், அந்த ஒரு மதிப்பெண் எப்படி தவறியது என பார்க்க வேண்டும். அதுபோன்றே ’இங்கே விடையை எடுத்து இப்படி எழுதி இருக்கலாமே. இந்தக் கணக்கில் இன்னும் சுலபமாக தீர்த்திருக்கலாமே..’ என்றெல்லாம் யோசனைகள் ஓடும் அல்லவா? அதையும் குறித்துக்கொள்ளுங்கள்.

உதாரண விடைத்தாளும் உதவும்

தேர்வை எழுதும்போதை விட தற்போது பக்குவமான மனநிலையில் விடைத்தாளை பார்வையிட முடியும் என்பதால், இப்படி நமது தவறுகளை நாமே ஆராய்வது எளிதாக இருக்கும். நிறைவாக, உங்களை விட அதிக மதிப்பெண் வாங்கிய அல்லது ஆசிரியரின் பாராட்டுக்குரிய மாணவரின் விடைத்தாளையும் வாங்கிப் பார்க்கலாம். ’கணக்குகளை தனியாக தீர்த்துக் காட்டியது, எளிமையான கோடுகளில் விரைவாக படம் வரைந்திருப்பது..’

என நம்மை மேம்படுத்தும் வழிகாட்டுதல்கள் எவையேனும் கிடைக்கக்கூடும். அவற்றில் தேவையானதையும் நமக்கான குறிப்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது நிறைவாக திருத்திய விடைத்தாள் தந்த பாடங்களின் அடிப்படையில் ஏராளமான குறிப்புகள் சேர்ந்திருக்கும்.

அவற்றில் அவசியமானதை வரிசைப்படுத்தி கண்ணில் படுமாறு படிக்குமிடத்தில் ஒட்டுங்கள். படிப்பதற்கு முன்பாக அல்லது இடையே ஓயும் பொழுதுகளில் அந்த பட்டியலின்மீது பார்வையை ஓட விடுங்கள். இனி பாருங்கள், அடுத்த தேர்வில் மேற்படி பிழைகள், தவறுகள், சறுக்கல்கள் எல்லாம் மறைந்துபோகும்,

பாடம் புகட்டும் தேர்வுகள்

தேர்வுக்காக பாடம் படிப்பதை அறிவோம். தேர்விலிருந்தும் பாடம் படிக்கலாம் என்பதை இப்போது அறிந்தோமா?. அறிந்ததுடன் அவற்றை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வருவோமா? இந்த இடைத்தேர்வின் விடைத்தாள்கள் கையில் கிடைத்ததும், கவனமாக ஆராய்ந்து குறிப்புகளை திரட்டுங்கள். அவற்றைப் பட்டியலாக்கி பார்வையில் ஒட்டுங்கள். கீழ்வகுப்பு மாணவர்கள் சுயமாக இதைச் செய்வதை காட்டிலும் மூத்த மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பெற்றோர் உதவியுடன் மேற்கொள்வது நல்லது.

பட்டியலிட்ட தவறுகள் அடுத்தடுத்த தேர்வுகளில் தவிர்க்கப்படுகிறதா என்பதையும் மீளாய்வு செய்வோம். மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடாது. அவை படிப்படியாகவே நிகழும். இந்த செயல்பாடுகளை சுழற்சி முறையில் தொடர்ந்து பழகினால், வழக்கமாய் தொலையும் மதிப்பெண்களை பத்திரமாய் மீட்கலாம். கூடுதல் அனுகூலமாய் படிப்பில் ஆர்வமும், தேர்வை ஒரு சவாலாக சந்திக்கும் ஈடுபாடும் பிறந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x