Published : 27 Nov 2019 08:05 AM
Last Updated : 27 Nov 2019 08:05 AM

மனித உரிமைகளை அச்சுறுத்துகிறது கூகுள், பேஸ்புக்: பிரபல தனியார் மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்துக்காக தனி மனிதர்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அம்னெஸ்டி என்ற பிரபல மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தற்போது அதிகமான தகவல் திருட்டை நடத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, கூகுள் இணையத்தில் நாம் ஒரு கார் பற்றிய தகவலை தேடியதாக வைத்துக் கொள்வோம். பின்னர் சிறிது நேரம் கழித்து, நாம் பார்க்கும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் அந்த காரின் விளம்பரம் வரும். கூகுளில் தேடிய கார் எப்படி பிற சமூக வலைத்தளங்களுக்கு வந்தது.

இதற்கு பெயர்தான் தகவல் திருட்டு. இந்த தகவல் திருட்டு படிப்படியாக செல்போன் எண், சுய விவரங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. மக்களுக்கு இலவச ஆன்லைன் சேவைகளை முதலில் வழங்கிவிட்டு, பின்னர் அவர்களின் தகவலை விளம்பர கம்பெனிகளுக்கு இந்நிறுவங்கள் விற்பனை செய்வது, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை தடுக்கிறது என்று அமைப்பு கூறியுள்ளது.

உலகில் மிகப்பெரிய 2 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் மூலம், மக்களிடம் தங்களின் கருத்துகள் மற்றும் பொருட்களை கம்பெனிகள் பேரம் பேசுகிறார்கள். இந்த வகையான வணிகம் மனிதர்களின் அடிப்படை உரிமையை அச்சுறுத்துகிறது.

ஆன்லைன் உலகத்துடன் மக்களை இணைக்கும் பேஸ்புக் மற்றும் கூகுள் தங்களின் வாடிக்கையாளர்கள் மீது ஒட்டுமொத்த ஆதிக்கத்தை செலுத்துகிறது.

இதுகுறித்து அம்னெஸ்டி நிறுவன செயலாளர் குமி நாயுடு கூறுகையில், “கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் பில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவை அறுவடை செய்து பணமாக்குகிறது.

நிறுவனங்களின் மனித உரிமை மீறல்களில் இருந்து, மக்களை பாதுகாக்கும் கடமை அனைத்து அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனங்கள், சுய கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ளன” என்றார்.

பேஸ்புக் மறுப்புஆனால், பேஸ்புக் நிறுவனம் இதை திட்டவட்டமாக மறுத்து, “தங்களின் வணிகநோக்கம், மனிதர்களை சுதந்திரத்துக்காக வும், அடிப்படை உரிமையை பாதுகாக்கவும்”அடிப்படையாக கொண்டது என பேஸ்புக்கூறியுள்ளது. ஆனால், அமைப்பின் குற்றச் சாட்டுக்கு கூகுள் தரப்பில் எந்த விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பயனாளர்களின் தகவலை முறைகேடாக விற்பனை செய்கிறதா என விசாரணையை தொடங்கிஉள்ளது. விசாரணை தொடங்கியதும், கூகுள் நிறுவனம் விளம்பரதாரர்களுடன், பயனாளிகளின் தரவை பகிர்ந்து கொள்ளும் முறையை குறைத்துள்ளதாக அம்னஸ்டி அறிக்கை கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x