Published : 21 Nov 2019 12:38 PM
Last Updated : 21 Nov 2019 12:38 PM

ஆந்திரப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி: 1- 6 ஆம் வகுப்பு வரை மாற்ற அரசாணை வெளியீடு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1- 6 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கற்பிப்பதற்கான அரசாணையை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை அடுத்த கல்வியாண்டில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அரசாணையை ஆந்திரப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ராஜ்சேகர் வெளியிட்டார். அதன்படி, 2020- 21 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 6-ம் வகுப்பு வரை தாய்மொழிக்குப் பதில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும். எனினும் தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக இருக்கும்.

7 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2021-21 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1 - 8 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். எனினும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் பற்றாக்குறையால் 1- 6 ஆம் வகுப்பு வரை அறிமுகமாக உள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய முதன்மைச் செயலாளர் ராஜ்சேகர், ''மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர் பள்ளிக் கல்வி ஆணையருடன் ஒருங்கிணைந்து ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை குறித்து சோதிக்க நடவடிக்கை எடுப்பார். அவர்கள் இருக்கும் நிலையைப் பொறுத்து மொழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். வருங்காலத்தில் ஆங்கிலப் புலமையோடு கூடிய திறன்வாய்ந்த ஆசிரியர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ''ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளும் சிறப்பாகக் கல்வி கற்க வேண்டும். இன்று உலகளாவிய அளவில் நாம் போட்டி போடுகிறோம். அதற்கு ஆங்கில வழிக் கல்வியில் அவர்கள் படிக்க வேண்டும்.

யாருக்காவது வேலை வேண்டுமெனில் அவர் ஆங்கிலம் கற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் நம்மால் மற்றவர்களுடன் போட்டி போட முடியாது. நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கப் போராடுகிறேன். அதற்காகவே அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x