Published : 21 Nov 2019 10:29 AM
Last Updated : 21 Nov 2019 10:29 AM

தேர்வுக்கு தயாரா?- ‘ஸ்மார்ட்’ ஆக படிக்கலாம்! சுலபமாக ஜெயிக்கலாம்!

தொகுப்பு: எஸ்.எஸ். லெனின்

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் பலரும் பார்க்கவே பரிதாபமாக இருப்பார்கள். சிலர் உணவு, ஓய்வுக்குக் கூட நேரம் ஒதுக்காது விழுந்து விழுந்து படிப்பார்கள். இன்னும் சிலர் தலையில் குட்டிக்கொண்டும், கத்திப் படிப்பதுமாக தங்களைத் தாங்களே சித்திரவதையாய் படிப்பார்கள்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தேர்வுக்குத் தயாராகத் தேவையில்லை. தேர்வு என்பது பெரும் மலையை புரட்டும் கடின உழைப்பல்ல; கவனம் குவித்து உற்சாகத்துடனும் ஓவியம் வரைவது போன்றதும் தான். அந்த வகையில் அதிகம் அலட்டிக்கொள்ளாது ’ஸ்மார்ட்’டாக படிக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

படிக்கும் இடம் தயார் செய்தல்

தேர்வு நோக்கில் அன்றாடம் பாடங்களை அமர்ந்து படிப்பதற்கு என தனி இடத்தை வீட்டில் ஒதுக்கிக்கொள்வது நல்லது. காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் அங்கு கிடைப்பது அவசியம். அதிகப்படியான வாகனப் போக்குவரத்து, தொலைக்காட்சி என கவனத்தை சிதறடிக்கும் இரைச்சல் இன்றி இருந்தால் நன்று. தினசரி ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதன் மூலம் பாடம் படிப்பதில் தொடர்ச்சியையும், எளிதான கவனக் குவிப்பையும் கொண்டு வரலாம். படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை கைக்கு எட்டும் தொலைவில் வைத்திருப்பதும் அவசியம். ஒரு குறிப்பேடு உதவியுடன் அன்றைய தினம் படிக்க வேண்டியது, வரும் நாட்களுக்கான சிறு தேர்வுகள், ஒப்படைவுகள், அவற்றுக்கான திட்டமிடல்கள், அன்றைய தினம் படித்தது, அடுத்த நாள் படிக்க வேண்டியது என்பவனவற்றை தொடர்ந்து குறித்து வரலாம். நாட்குறிப்பு போன்று அதைத்தொடர்ந்து பராமரித்து வந்தால், படிப்பில் தொடர்ச்சியை அறியவும், நம்மை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். படிப்பதற்கு என ஒதுக்கிய இடத்தில் செல்ஃபோனில் விளையாடுவதையும், நண்பர்களுடன் அரட்டையடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சோர்வு அகற்றும் உத்திகள்

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் களைப்படைவது இயல்பு. பள்ளியில் பாடங்களை கவனிப்பது, குறிப்பெடுப்பது, சிறு தேர்வுகள் எழுதுவது, வீடு திரும்பியதும் வீட்டுப்பாடம் செய்வது, எழுதிப் பார்ப்பது, எழுதியதை சரிபார்ப்பது, தவறுகளைத் திருத்துவது.. என தொடர்ந்து படிக்கும்போது சோர்வு வரத்தான் செய்யும். ஆனால் முறையாக படித்தால் இந்த சோர்வை எளிதில் விரட்டலாம்.

படிப்பதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்குகிறோம் எனில், அதில் தொடர்ந்து 50 நிமிடங்களுக்கு மட்டுமே படிக்கலாம். அடுத்த 10 நிமிடங்களை ஓய்வுக்கு ஒதுக்க வேண்டும். அந்த ஓய்வு என்பதையும் பாடம் தொடர்பான இதரப் பணிகளோ, திட்டமிடுதல்களாகவோ கொள்ளலாம். இதே போன்று அதிகபட்சம் 3 சுற்றுகள், அதாவது 3 மணி நேரம் படிக்கலாம். மாணவர்களின் வயது மற்றும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு இந்த நேரத்தை தீர்மானிக்கலாம். அதன் பிறகு உணவோ, சிற்றுணவோ எடுத்துக்கொள்ள அரை மணி நேர இடைவெளி விட வேண்டும். இந்த நேரத்தில் சிறுநடை சென்று வரலாம். மரங்கள், பூஞ்செடிகள், வானம் என இயற்கையை ரசிக்கலாம். பின்னர் அடுத்த சுற்றுக்கு படிக்க அமரலாம். அப்போது ஓரிரு நிமிடங்கள் முன்பு படித்ததை திருப்புதல் செய்துவிட்டு அடுத்த பாடத்துக்கு செல்லலாம். இவ்வாறு படித்தால் அலுப்போ, சலிப்போ இன்றி தொடர்ந்து படிக்க முடியும்.

கடினம் நீக்குவோம்

எளிமையான பாடப்பகுதிகளை விரும்பியும் விரைவாகவும் படித்துவிடலாம். ஆனால் கடினமான பகுதிகளை படிப்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்கலாம். அவற்றை தள்ளிப்போடவோ, தவிர்க்கவோ செய்வார்கள். அவ்வாறு செய்வது பாடத்தின் சுமையை கூட்டுமே தவிர,எந்த வகையிலும் தீர்வு தராது. உண்மையில் பாடப்பகுதியில் கடினமானது என்ற ஒன்றே கிடையாது. புரிந்துகொள்வதிலும், படிக்க அணுகுவதிலும் உணரும் தடுமாற்றங்களே பாடத்தின் கடினமாக தோன்றுகின்றன. எனவே பாடத்தை
முறையாக புரிந்து கொண்டுள்ளோமாஎன்பதை முதலில் உறுதி செய்யவேண்டும். அப்படியும் புரியாத சொற்றொடர்கள், பெயர்கள் பாடங்களில் இருந்தால், அவற்றை வேறு வகையில் படிக்கலாம்.

உதாரணத்துக்கு தாவரவியல், விலங்கியல் பெயர்களைப் படிக்கும்போது குறுக்கிடும் லத்தின், கிரேக்க மொழி மூலப் பெயர்கள் விசித்திரமாக அமைந்திருக்கும். ஒரு சில சுவாரசியமான குறுக்குவழிகளைப் பின்பற்றி அந்தப் பெயர்களை நினைவில் நிறுத்தலாம். தனிப்பட்ட வகையில் அதற்கான வழிமுறையை நாமே கண்டறியலாம். அதேபோல ஒரு பாடத்தலைப்பின் கீழான கருத்துக்கள் அல்லது நிகழ்வுகளை ஏதேனும் கதையின் சம்பவங்கள் போல தொடர்ச்சியை ஏற்படுத்தி மனதில் பதியவைக்கலாம். எதுகை மோனையிலான வசனங்கள் மற்றும் சினிமா பாடலின் ராகங்கள் மூலம் மனப்பாடப் பாடல்கள், சூத்திரங்கள், விதிகள் போன்றவற்றை ஆசிரியர்களே தற்போது பின்பற்றுகிறார்கள்.

எழுதிப் பார்க்கலாம்

பாடங்களை படிப்பதுடன் அவற்றை உடனுக்குடன் முறையாக எழுதிப் பார்ப்பது அவசியம். விரைவாக எழுதிப் பழகுவது தேர்வறை நேர மேலாண்மைக்கு உதவும். ஆனால் எதற்கெடுத்தாலும் எழுதிப் பார்ப்பது என்பது, அடுத்தப் பாடத்தை படிப்பதற்கான நேரத்தை அபகரிக்கக்கூடும். எனவே எப்போதும் ஒரு பாடத்தை முதல் முறை படிக்கும்போது ஓரிரு முறைகள் எழுதிப் பார்க்கலாம். நா வறள பலமுறை கத்திப் படிப்பதை காட்டிலும், ஓரிரு முறைகள் பார்த்தே எழுதுவதும் உதவும். படித்து முடித்த நம்பிக்கை வந்ததும் ஒரு முறை எழுதிப் பார்க்கலாம். அதில் தவறுகள் அதிகம் தென்பட்டால் மீண்டும் ஒரு முறை எழுதிப் பார்க்கலாம். திருப்புதல் செய்யும்போது, முழுவதுமாக எழுதிப் பார்க்காது முக்கிய வார்த்தைப் பிரயோகங்கள், விதிகள், கருத்துக்கள் போன்றவற்றை மட்டுமே விரைவாக எழுதி பார்த்தால் போதும். மனவரைபட உத்தியில் படித்தவர்கள், அதை வரைந்தும், எழுதிப் பார்ப்பதற்கான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x