Published : 11 Nov 2019 08:04 AM
Last Updated : 11 Nov 2019 08:04 AM

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு, டெங்கு கட்டுப்படுத்தல்: மேற்குவங்க, டெல்லி மாநில முதல்வர்கள் பெருமிதம்

புதுடெல்லி / கொல்கத்தா

மேற்கு வங்கக் குழந்தைகளுக்கு 100 சதவீதம் நோய் தடுப்பு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லியில் டெங்குகாய்ச்சலில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பெருமிதமாகக் கூறியுள்ளனர்.

தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு, சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த, ‘உலக நோய்த் தடுப்பு தினம்’ நவம்பர் 10-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்கு தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து குழந்தையை நோய்த் தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.

குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாகவும் சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது. நோய்க்கான மருந்து கண்டுபிடிக்க முதலீடு செய்வதைவிட, நோய்த் தடுப்பே சிறந்தது. இதற்குப் பெரிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியமில்லை.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நோய்த்தடுப்பு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இதனால் 30 லட்சம் வரை இறப்புகள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் 1.87கோடி குழந்தைகளுக்கு அடிப்படையான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பு மருந்துகளின் அளவு, பயனடைவோர் எண்ணிக்கை, நிலப்பரப்பு, ஈடுபடுத்தப்பட்டுள்ள மனிதவளம் ஆகியவற்றைக் கருதும்போது இந்தியா உலகளாவிய மிகப்பெரிய நோய்த் தடுப்பு திட்டங்களை கொண்டுள்ளது எனலாம். உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டம், கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், 65 சதவிதம் குழந்தைகளுக்குத்தான் முதலாண்டுக்குள் தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது. இந்த முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பு உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு டிசம்பர் 2014-ல்‘இந்திர தனுஷ்’ திட்டத்தைத் தொடங்கியது. இரண்டு வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அனைத்துத் தடுப்பு மருந்துகளையும் அளிப்பதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் தடுப்பு மருந்துகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத குழந்தைகளுக்கு நோய் தடுப்பு செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்று (நேற்று) உலக நோய் தடுப்பு நாள். தடுப்பூசிகளையே செயலிழக்க வைக்கும் கடும் நோய்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத குழந்தைகளும் நோய் தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவீர்கள்'' என்று மம்தா தெரிவித்துள்ளார்.

அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:டெங்குவுக்கு எதிரான போரில் டெல்லிவாசிகள் வெற்றி பெற்றுள்ளோம். டெல்லி குறித்து நான் பெருமைப்படுகிறேன். டெங்குவால் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெங்குவை குணப்படுத்தும் முறையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால், அதற்கான வழியை டெல்லி காட்டியுள்ளது.

2015-ம் ஆண்டு டெல்லியில் 15,000 மக்கள் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்பட்டு, அதில் 60 பேர்உயிரிழந்தனர். ஆனால், தற்போது 1,100 பேர்தான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் டெங்குவால் ஒருவரைக்கூட இழக்கவில்லை. டெல்லியில் நடத்தப்பட்ட '10 -ஹாஃப்டே, 10-பஜே, 10 நிமிடம் ' என்ற டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை போல நாட்டின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாது, உலகளவில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x