Published : 08 Nov 2019 01:37 PM
Last Updated : 08 Nov 2019 01:37 PM

பனாரஸ் இந்து பல்கலை.யில் முஸ்லிம் பேராசிரியர் நியமனம்: போராட்டம் வெடித்தது

பனாரஸ்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத வித்யா விக்யான் இலக்கியத் துறையில் முஸ்லிம் ஒருவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ஆய்வு அறிஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தரின் வீட்டுக்கு அருகில் அவர்கள் அமர்ந்து போராடி வருகின்றனர். இசை வாத்தியங்களை வாசிப்பதன் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஈர்க்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ராகேஷ் பாட்நகருக்கு போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், ''பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரான மதன் மோகன் மாளவியா, சம்பந்தப்பட்ட இலக்கியத் துறையை பல்கலைக்கழகத்தின் இதயமாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகம் கலாச்சாரம், மதம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளுக்குப் பெயர் போனது. இவை அனைத்தையும் நிர்வாகம் அறிந்தும் ஓர் இந்து அல்லாத நபரைப் பணியில் அமர்த்தியிருக்கிறது.

இது நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது. அதனால் பேராசிரியர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகச் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் சிங் கூறும்போது, ''இலக்கியத் துறையில் நேர்காணலுக்குப் பிறகே பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டது. யூஜிசி விதிமுறைகள் மற்றும் பல்கலை. விதிகளின்படியே பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மதத்துக்கோ சமயத்துக்கோ இடமில்லை. தேர்வு செய்யப்பட்டவரின் தகுதியை வைத்து, வெளிப்படைத் தன்மையுடனேயே இதை மேற்கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

எனினும் போராட்டம் குறித்து அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x