Published : 04 Nov 2019 10:16 AM
Last Updated : 04 Nov 2019 10:16 AM

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மானியம் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம்: யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் அமல்

சி.பிரதாப்

சென்னை

பல்கலை., கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இனி கல்லூரியை ஓராண்டு நடத்துவதற்கு தேவையான நிதி இருந்தால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்நாட்டில் 993 பல்கலைக்கழகங்கள், 39,931 கல்லூரிகள் மற்றும் 10,725 தனிப்பாடக் கல்விநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 3.74 கோடி மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேருகின்றனர்.

இதற்கிடையே உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு மாற்றங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கல்லூரிகளுக்கு மானியம் வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுநெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரிகள் சிலர் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மானியமும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு கல்லூரிகள் முறைகேடுகள் செய்வதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதற்கான விதிமுறைகளை இப்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப மறுசீரமைக்க தற்போது யுஜிசி முடிவு செய்தது. அதற்கேற்ப புதிய வழிகாட்டுநெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதலில் கல்லூரியை குறைந்தபட்சம் ஓராண்டு நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

கல்லூரிகள், பல்கலைக்கழத்தின் நிரந்தர இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். நிரந்தர அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில், பல்கலைக்கழக ஆய்வுக் குழு நேரடியாக கள ஆய்வு செய்து அனைத்து அம்சங்களும் விதிகளின்படியே இருந்தால் மட்டுமே அனுமதி தர வேண்டும்.

ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கி, அந்தப் பணிகள் முடிந்த பின்னர் அனுமதி அளிக்க வேண்டும். இவை அனைத்தும் கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த நாளில் இருந்து அதிகபட்சம் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு யுஜிசியிடம் அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தவிர்த்து நன்கொடை உள்ளிட்ட வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும், மத்திய அரசின் தேசிய தரவரிசைப் பட்டியல் திட்டத்தில் (என்ஐஆர்எப்) அனைத்து பல்கலை., கல்லூரிகள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

யுஜிசி வகுத்துள்ள இந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே இனிமானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தால் சரிசெய்ய குறிப்பிட்ட கால அவகாசம்தரப்படும். அதற்குள் கல்வி நிறுவனங்கள் பணிகளை முடிக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும்.

கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு யுஜிசி உயர்நிலைக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த மாதமோ, அடுத்த மாதமோ புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

இதன்மூலம் அனைத்து கல்விநிறுவனங்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியசூழல் உருவாகும். அரசின் மானியமும் வீணாகாமல் தேவையான பணிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். இதேபோல் பிஎச்டி என்ற ஆராய்ச்சி படிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x