Published : 01 Nov 2019 05:32 PM
Last Updated : 01 Nov 2019 05:32 PM

நெருக்கடி நிலையில் டெல்லி: காற்று மாசு காரணமாக நவ.5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி

டெல்லியில் காற்று மாசு, மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியுள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் கேஜ்ரிவால், ''விவசாய நிலங்களில் காய்ந்த சருகுகளை எரித்ததன் மூலம் டெல்லி காற்று மாசு உச்ச நிலையை அடைந்துவிட்டது. இதனால் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாககாற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்சபட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.

தொடர்ந்து 450 புள்ளிகளுக்கு மேல் காற்றின் மாசு 48 மணிநேரம் நீடித்தால், அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அரசு இருக்கிறது. அதாவது சரக்கு வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு, கட்டுமானப் பணிகள் நிறுத்தம், பள்ளிகளை மூட அறிவுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று காற்றின் மாசு அளவு உச்ச அளவை நெருங்கியதால், காலை நேரத்தில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்குச் செல்பவர்கள், உடற்பயிற்சி செல்பவர்கள் அதைப் புறக்கணித்தனர்.

குழந்தைகள் வேகமாகச் சுவாசிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதால், குழந்தைகளின் உடல்நலன் குறித்துப் பெற்றோர் அனைவரும் கவலையடைந்தனர். இந்நிலையில் பள்ளிகள் மூடப்படுவது குறித்த அறிவிப்பு பெறோர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x