Published : 31 Oct 2019 14:45 pm

Updated : 31 Oct 2019 16:38 pm

 

Published : 31 Oct 2019 02:45 PM
Last Updated : 31 Oct 2019 04:38 PM

பாட்டுப் பாடவா.. பாடம் கற்க வா.. திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் புதுமுயற்சி; யூடியூபில் குவியும் வரவேற்பு

goverment-school-teacher-s-teaching-effort

திருப்பூர்

எப்படியாவது மாணவனுக்கு நாம் நடத்துவதைப் புரிய வைத்துவிட முடியாதா என்ற முயற்சியில்தான் ஆசிரியர்கள் சிலர் நூதன முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றெல்லாம் விதிவிலக்கு ஏதுமில்லை. மாணவர் மீதான அக்கறையும், பணி மீதான அர்ப்பணிப்பும் மட்டுமே அடிப்படை. அவ்வாறாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியாக இருப்பதில்லை.

அதனாலேயே தன்னலமற்ற இந்தச் சேவையை உலகறியச் செய்வது உத்தம பணியாகத் தெரிகிறது. அந்த வரிசையில் நம் கவனத்துக்கு வந்தவர்தான் ஆசிரியர் உதயகுமார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் உதயகுமார். தனது பணியை ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குருவரெட்டியூரில்தான் ஆரம்பித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து மாறுதலாகி திருப்பூர் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

உதயகுமார் வகுப்பில் பாடம் எடுக்கும் உத்தியை வார்த்தைகளால் விவரிப்பதைவிட அவருடைய யூடியூப் வீடியோ ஒன்றைப் பார்த்தால் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

வீடியோ இணைப்பு:

இந்தக் குறிப்பிட்ட வீடியோவை வாட்ஸ் அப் ஃபார்வர்டில் பார்த்துவிட்டுதான் ஆசிரியர் உதயகுமாரிடம் பேசினோம்.

உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்?

என் பெயர் உதயகுமார். நான் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டைக்கு உட்பட்ட குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறேன். கடந்த 6 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றுகிறேன்.

எப்படி பாடல் மூலம் ஆங்கிலம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது?

என் அப்பா ஒரு கட்டிடத் தொழிலாளி. அவருக்கு அழகான குரல். வேலை நேரத்திலும் சரி வீட்டில் ஓய்வில் இருக்கும்போது சரி டிஎம்எஸ் பாடல்களை உச்சஸ்தாயியில் பாடி அசத்துவார். அவரைப் பார்த்தே நானும் பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டேன். ஆரம்ப நாட்களில் அப்பாவைப் போல எனக்கும் பாடல் பாடுவது பொழுதுபோக்காகவே இருந்தது. ஆனால், நாட்கள செல்லச் செல்ல அந்தத் திறமையை ஏன் பாடம் கற்பித்தலில் பயன்படுத்தக் கூடாது என்று தோன்றியது.

சினிமா பாடல்களின் மெட்டுகளைப் பாடம் கற்பிக்கத் தேர்வு செய்தது ஏன்?

நான் வேலை பார்ப்பது அரசுப் பள்ளி. அங்கு பெரும்பாலான குழந்தைகள் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர்களே. அப்பா, அம்மா என இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். குழந்தைகள் பள்ளியில் நாம் சொல்லிக் கொடுப்பதை படிப்பதோடு சரி வீட்டில் அவர்களைக் கவனிக்க துரதிர்ஷ்டவசமாக ஆட்கள் இருப்பதில்லை. அதனால், பள்ளியிலேயே அவர்கள் பாடத்தை முழுமையாகக் கற்றுச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்குப் பல வழிகளையும் பயன்படுத்திப் பார்த்தேன். இறுதியில் குழந்தைகளுக்கு சினிமா பாடல்களின் மெட்டில் ஆங்கிலம் கற்பிக்க முயன்றேன். முதல் முயற்சியிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

பிரபல சினிமா பாடல்களின் மெட்டில் ஆங்கிலக் கவிதைகளைக் கற்பிக்கத் தொடங்கினேன். அச்சு பிறழாமல் அவர்கள் மணப்பாடம் செய்தார்கள். பின்னர், அர்த்தம் சொல்லிக் கற்பித்தேன். அது அவர்களின் மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கியது.

பின்னர் இதே பாணியில் கட்டுரை, இலக்கணம், கடிதம் வரைதல், பத்தி எழுதுதல் என எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தேன். தேர்வில் நல்ல பலன் கிடைத்தது. இப்போதெல்லாம் மாணவர்கள் ஆங்கில வகுப்பை மிகவும் ஆர்வத்துடன் கவனிக்கின்றனர்.

இது வெற்றிகரமான யுத்தியாக இருந்தாலும்கூட மனதின் பின்னணியில் சினிமா பாடலும் ஓடாதா?

நிச்சயமாக இல்லை. நான் வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது எனக்கு அந்த மெட்டு மட்டுமே நினைவுக்கு வரும். வார்த்தைகளோ காட்சிகளோ வராது. அதேபோல் மாணவர்களிடமும் நான் விசாரித்தேன் அவர்களும் அதையே கூறினர். மாணவர்கள் சம்மதத்துடனேயே இந்த முயற்சியைத் தொடர்கிறேன்.

பள்ளியில், பெற்றோர் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா எனது முயற்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரே நேரடியாக வகுப்பறையில் நான் பாடம் எடுக்கும்போது பார்வையிட்டுள்ளார். மாணவர்களிடமும் கற்பித்தல் முறை குறித்துப் பின்னூட்டம் பெற்றார். அவரின் ஊக்குவிப்பாலேயே என்னால் இதைத் தொடர இயல்கிறது. அதேபோல் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிப்பதைக் கண்டு என்னிடம் நன்றி தெரிவித்துள்ளனர். அந்தத் தருணம்தான் என் முயற்சி மீது எனக்கே நம்பிக்கை வந்த தருணம்.

இதுதவிர யூடியூபிலும் சில வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளீர்கள் அல்லவா?

ஆமாம். ஓராண்டுக்கு முன்னரே யூடியூபில் பதிவேற்றினேன். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு யூடியூபில் வீடியோ பதிவிடலாமா என்று சந்தேகம் வந்ததால் அவற்றை நீக்கிவிட்டேன். அண்மையில் எங்கள் சிஇஓ-வே எனது கற்பித்தல் முறையைப் பாராட்டினார். அதன் பின்னரே மீண்டும் யூடியூபில் பதிவேற்ற ஆரம்பித்தேன். சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில ஆசிரியர்கள் எனது வீடியோவை ஸ்மார்ட் வகுப்பறையில் திரையிட்டுக் காட்டி பாடம் எடுப்பதாகச் சொன்னார்கள். ஊக்கமளிப்பதாக இருந்தது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் சவால் என எதை நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களுக்கு இருக்கும் சவால் என்று சொல்வதைவிட மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்று நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை மட்டும்தான் உண்கிறார்கள். காலையில் சாப்பிடாமலேயே வருகிறார்கள். காலை வழிபாட்டு நேரத்தில் அரை மணி நேரம் நின்றால் 4,5 பிள்ளைகளாவது மயங்கிவிடுகிறார்கள்.

கேட்டால் காலையில் சாப்பிடவில்லை என்பார்கள். இது என்னை மிகவும் பாதிக்கிறது. காலையில் பட்டினியுடன் வரும் குழந்தையால் எப்படி பாடத்தில் கவனம் செலுத்த இயலும் என யோசிப்பேன். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தும்கூட எங்கள் பிள்ளைகள் அத்தனை நேர்த்தியாகக் கற்கிறார்கள். காலையிலும் பள்ளியில் சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

பள்ளிப் பக்கம் வருவதே பெரிய விஷயம் என்ற பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கற்றலை எளிமையாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சியை நான் மேற்கொண்டிருக்கிறேன். இதில் ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in


யூடியூப்ஆசிரியர்உதயகுமார்திருப்பூர்ஆசிரியர் உதயகுமார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author