Published : 30 Oct 2019 07:29 AM
Last Updated : 30 Oct 2019 07:29 AM

லஞ்சம் கொடுக்காத விழிப்புணர்வு வாரம்; ஊழலின் விளைவுகள் குறித்து போட்டி- பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு அறிவுரை

புதுடெல்லி

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (சிவிசி) சார்பில், ‘லஞ்சம் கொடுக்க வேண்டாம்’ என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை ‘வாழ்க்கைமுறை’ விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. விழிப்புணர்வு வாரத்துக்கான இந்த ஆண்டின் மையக் கருத்து ‘நேர்மை - ஒரு
வாழ்க்கை முறை’ என வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நேர்மையான, ஊழல் இல்லாத சமுதாயத்தை கட்டியெழுப்ப, சமூகத்தின் அனைத்து பிரிவுகளும், குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கஇந்த விழிப்புணர்வு நிச்சயம் உதவும்.

ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள்தான் ஒரு தேசத்தின் அடித்தளமாக உள்ளன. ஒவ்வொரு தனிநபர் மற்றும் அமைப்புகள் நேர்மையாக இருக்கும் போது நாட்டில் வளர்ச்சி ஏற்படும். ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டங்களை உருவாக்கினால் மட்டும் போதாது.

தனி மனிதனுக்குள் ஒழுக்கநெறிகளை ஆழமாக வேரூன்ற வேண்டும். எனவே, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், அனைத்து மத்திய அரசு துறைகளையும் இணைத்து, பொதுமக்களிடம் நெறிமுறைகளை வளர்க்க தேவையான மேம்பாட்டு நடவடிக்கை செய்ய வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், லஞ்ச தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஊழலின் மோசமான விளைவுகள் பற்றி விரிவுரைகள், குழுவிவாதங்கள், கருத்தரங்குகள், வினாடிவினா, கட்டுரை எழுதுதல், சொற்பொழிவு, கார்ட்டூன் மற்றும் சுவரொட்டி போட்டிகள் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x