Published : 21 Oct 2019 05:23 PM
Last Updated : 21 Oct 2019 05:23 PM

பெற்றோர் வேலைக்குப் போகும்போது உதவி; போகாதபோது பிச்சை: பள்ளியின் வாசனையே அறியாத நாடோடி சிறுவர்கள்!

பெர்ஹாம்பூர்

பெற்றோர் வேலைக்குப் போகும்போது அவர்களுக்கு உதவியாகவும் போகாதபோது பிச்சை எடுத்தும் கர்நாடகா சிறுவர்கள் 30 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கர்நாடகாவில் சமூக நலத் துறையும் அக்கமாதேவி பெண்கள் பல்கலைக்கழகமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகத்தின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், ஹரன்ஷிகரி சமூகத்தைச் சேர்ந்த 6 முதல் 11 வயதுக் குழந்தைகள் 30 பேர் இதுவரை பள்ளிக்கே செல்லாதது தெரிய வந்துள்ளது. சிண்ட்கி தாலுக்காவின் கோல்கேரி கிராமத்திலும், வித்யாநகர் குடிசைப் பகுதியிலும் அச்சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்களாக உள்ளனர்.

அவர்கள் குறித்து ஆய்வு செய்த அக்கமாதேவி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கங்காதர் பி.சோனார் மற்றும் மாணவி ஷபானா கூறும்போது, ''இந்தக் குழந்தைகள் 30 பேரும் இதுவரை பள்ளியில் சேர விண்ணப்பம் கூட அளித்ததில்லை. இவர்களின் பெற்றோர்கள் நாடோடிகள் போல வாழ்ந்து வருகின்றனர். பிழைப்புக்காக மகாராஷ்டிரா செல்லும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். போதிய உணவுக்கே வழியில்லாத சூழல், அவர்களைப் படிப்பில் இருந்து விலக்கி வைக்கிறது.

நிரந்தரமாக வீடு எதுவும் இல்லாத பெற்றோர், அரசு நிலங்களில் கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். நவம்பர் முதல் மே வரை, கரும்புகளை வெட்ட மகாராஷ்டிரா செல்கின்றனர். சிலர் கட்டிட வேலைகளுக்காக பெங்களூருவுக்கும் வேறு சிலர் ஹைதராபாத்துக்கும் குடியேறுகின்றனர். அங்கேயே தங்கும் குழந்தைகள் பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றனர். பெற்றோருக்கு வேலை இல்லாத சமயங்களில் பிச்சை எடுக்கச் செல்கின்றனர். இதுதான் அக்குழந்தைகளின் அவக நிலையாக இருக்கிறது.

'ஆவணங்கள் இல்லை'

பெற்றோரிடம் பேசும்போது, தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப ஆசைப்படுவது தெரிந்தது. தங்களின் குழந்தைகளாவது நாடோடி வாழ்க்கை வாழக்கூடாது என்று நினைக்கின்றனர். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால், குழந்தைகளுக்கு இடம் கிடைக்காது என்று நினைக்கின்றனர்.

அரசு தங்களின் குழந்தைகளின் படிப்பைக் கவனித்துக் கொண்டால், அவர்களை விட்டுவிட்டு, வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்'' என்கின்றனர் சோனாரும் ஷபானாவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x