Published : 18 Oct 2019 06:05 PM
Last Updated : 18 Oct 2019 06:05 PM

ஜாக்டோ- ஜியோ போராட்டம் உரிமைக்கானது; ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் உரிமைக்காக நடத்தப்பட்டது என்பதால் அவர்கள் மீது பதிந்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோ கிராப் அமைப்புகள் கடந்த நான்காண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆசிரியர், அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் அரசுக்கு அழுத்தம் தரவே பலவிதமான போராட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

போராட்டத்தின் விளைவாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அரசின் செயல் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் எடுத்துச் செல்வது ஆசிரியரும் அரசு ஊழியர்களுமே. இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான நடவடிக்கைகளை கருணை உள்ளத்தோடு கைவிடும்படி முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், 17 பி நடவடிக்கையில் இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வும் 3 ஆண்டுகள் பதவி உயர்வும் வழங்கப்படாது என்பது அரசுப் பணியாளர் விதிகளில் ஒன்றாகும். அரசுப் பணி விதிகளுக்குப் புறம்பாக நடத்தல், பாலியல் வழக்கு , வன்கொடுமை உள்ளிட்ட தகாத சம்பவங்களில் ஈடுபடுவோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

உரிமைப் போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படைச் சுதந்திரம். போராட்டத்தில் ஈடுபட்டதால் பதவி உயர்வு மறுக்கப்படுவது என்பது தவறானது. 17 பி பெற்றவர்களுக்கான தண்டனை மேலே குறிப்பிட்ட செயலுக்காக வழங்கப்படுவது. அது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொருந்தாது.

ஆசிரியர்- அரசு ஊழியர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட துறைரீதியான 17 பி உள்ளிட்ட நடவடிக்கையை ரத்து செய்து, ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x