Last Updated : 18 Oct, 2019 05:40 PM

 

Published : 18 Oct 2019 05:40 PM
Last Updated : 18 Oct 2019 05:40 PM

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பதவி உயர்வு மறுப்பு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக் கல்வித்துறையில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 2003 வரை 6 முதல் 8-ம் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு 6 முதல் 8-ம் வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் 6 முதல் 8-ம் வகுப்புகளில் ஏற்கனவே பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றாலே, அந்த பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.

மேலும் 6 முதல் 8-ம் வகுப்புகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி இல்லை எனக் கூறி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர், "பள்ளிக்கல்வித் துறையில் 2004-ல் தொகுப்பூதியத்தில் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 57,179 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு அனைவரும் 2006-ல் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டதால் இடைநிலை ஆசிரியர்களான பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் குறைவான இடைநிலை ஆசிரியர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பதவி உயர்வும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டாவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடவில்லை.

இந்நிலையில் சில மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்கின்றனர். இதை நிறுத்த வேண்டும். மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் வழங்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x