Published : 17 Oct 2019 10:23 AM
Last Updated : 17 Oct 2019 10:23 AM

வெற்றியாளர்களை சரியாக வேறுபடுத்தி காட்டும் புதிய கிரிக்கெட் விதிக்கு சச்சின் வரவேற்பு 

புதுடெல்லி

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின்போது சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது. இதை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின்போது முக்கிய ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தால், வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு வருகிறது. அது என்ன சூப்பர் ஓவர் முறை என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்:

கிரிக்கெட் போட்டிகள் எதிர்பாராத வகையில் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வீசப்படும். அது சூப்பர் ஓவர் எனப்படும். இந்த ஓவரில் அதிக ரன்களைக் குவிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதே நேரத்தில் சூப்பர் ஓவரின் இறுதியிலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், மொத்த ஆட்டத்திலும் அதிக பவுண்டரிகளை விளாசிய அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.

இந்த விதிமுறையைப் பயன்படுத்தித்தான் கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து - நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 241 ரன்களைக் குவித்து சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. ஆனால் இதிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமநிலை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இந்த விதியை மாற்ற ஐசிசி சமீபத்தில் முடிவு எடுத்தது. இதன்படி சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமநிலையில் முடிந்தால், மற்றொரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். ஏதாவது ஒரு அணி அதிக ரன்களை எடுத்து வெற்றிபெறும் வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் இந்த முடிவை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த புதிய விதியானது வெற்றியாளர்களை, துல்லியமாக தேர்ந்தெடுக்க உதவும்.

அவர்களையும் ஆட்டத்தில் தோல்வியடைந்தவர்களையும் சரியாக வேறுபடுத்தி காட்டும். அதனால் இந்த விதியைநான் முக்கியமானதாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்குலிக்கு வாழ்த்து

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட உள்ள சவுரவ் கங்குலிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய கிரிக்கெட்டுக்கு எப்போதும்போல் நீங்கள் சிறப்பாக சேவையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள உங்களுக்கும், புதிய குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x