Published : 17 Oct 2019 09:54 AM
Last Updated : 17 Oct 2019 09:54 AM

உலகளாவிய பசி பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு

புதுடெல்லி

உலகளாவிய பசி பட்டியலில் 102-வது இடத்தை பிடித்து, இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 95-வது இடத்தில் இந்தியா இருந்தது.

அயர்லாந்து நாட்டின் உதவி நிறுவனமான கான்கரன் வேல்ட்வைட் மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹைலைப் நிறுவனமும் இணைந்து உலகம் முழுவதும் பசியில் இருப்போர் குறித்து ஆய்வு செய்து பட்டியல் (ஜிஎச்ஐ) வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியா அபாயகரமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் 113 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட போது 83-வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 117 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியா பெரிய சரிவை சந்தித்து 102-வது இடத்தில் உள்ளது. ஜிஎச்ஐ பட்டியலின்படி 100 புள்ளிகள் வழங்கப்படும்.

அதில் பூஜ்யம் புள்ளி பெறும் நாடு பசி இல்லாத நாடு என்றும் 100 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் பசியில் மோசமான நிலையில் உள்ளது என்றும் வரையறுக்கப்படும். அதன்படி, கியூபா, துருக்கி, உக்ரைன், குவைத் போன்ற நாடுகள் பசியின்மையில் முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்தியா 30.3 மதிப்பெண்கள் பெற்று102-வது இடத்தை பிடித்து பசியால் வாடும் நாடு என்ற நிலையை பெற்றுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள்நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம்போன்ற நாடுகள் முன்னேறி உள்ளதால், இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பசிபட்டியலில் இந்தியா பின்னோக்கிசெல்கிறது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகள் வீணாக்கும் உணவுகள், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எடை, உயரம், இறப்பு விகிதம், சத்தான உணவு அடிப்படையில்தான் ஜிஎச்ஐ பட்டியல் செய்யப்படும்.

அதன் அடிப்படையில், 6 மாதம் முதல்23 மாதம் வரை உள்ள குழந்தைகள் இறப்பு சதவீதம் 9.6 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே இந்திய குழந்தைகள்தான் 20.8 சதவீதம் உணவுகளை வீணாக்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் (73வது இடம்), இலங்கை (66), வங்கதேசம் (88), மியான்மர் (69), பாகிஸ்தான் (94), சீனா (25) என்ற இடங்களில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x