Published : 15 Oct 2019 11:05 AM
Last Updated : 15 Oct 2019 11:05 AM

பார்வை இழந்த இயற்பியலாளருக்கு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

பெல்ஜியம்

பெல்ஜிய இயற்பியலாளர் ஜோசப் பிளேட்டோவின் 218வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக கூகுள் நிறுவனம் தனது இணைய முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு அவரை கவுரவப்படுத்தி இருந்தது.

ஜோசப் அன்டோயின் ஃபெர்டினாண்ட் பிளேட்டோ, பெல்ஜியம் நாட்டில் 1801-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், சட்டப்படிப்பை முடித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். குறிப்பாக மனித விழித்திரையில் ஒளி மற்றும் வண்ணத்தின் செயல்பாடுகளை பற்றி முழுமையாக ஆய்வு மேற்கொண்டார்.

இவருடைய முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை மூலம் மனித விழித்திரையில் படங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விவரித்தார். அதன்பின், 1832-ம் ஆண்டு ஃபெனாகிஸ்டிஸ்கோப் எனப்படும் கருவியை கண்டுபிடித்தார். அதில், 2 தட்டுகளை இணைத்து, படங்களை ஓட செய்யும்போது, வீடியோ (நகரும் படங்கள்) வருவதை கண்டுபிடித்தார்.

இந்த ஃபெனாகிஸ்டிஸ்கோப் தான் அனிமேஷன் மற்றும் சினிமாவுக்கு அடைத்தளம் போட்டது. ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும்போது ஜோசப் பிளேட்டோ தனது பார்வையை இழந்தார். பார்வையற்றவராக இருந்த போதும் விஞ்ஞானத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். கென்ட் பல்கலைக்கழகத்தில் தனது மகன் மற்றும் மருமகன் உதவியுடன் இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஜோசப் பிளேட்டோ தனது 81-வது வயதில் 1883-ம் ஆண்டு உயிரிழந்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x