Published : 15 Oct 2019 10:47 AM
Last Updated : 15 Oct 2019 10:47 AM

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ஊரே சேர்ந்து விழா எடுத்த நெகிழ்ச்சி

பரமத்தி

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர் செல்வக்கண்ணனுக்கு, ஊரே சேர்ந்து விழா எடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் அன்பாசிரியர் செல்வக்கண்ணன். அவருக்கு ஆசிரியப் பணியின் உயரிய விருதான தேசிய நல்லாசிரியர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

தன்னுடைய கிராமத்துப் பள்ளியை, பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.75 லட்சம் திரட்டி தரம் வாய்ந்த பள்ளியாக மாற்றியது, ரூ.18 லட்சம் மதிப்பில் கல்விச் சீரைத் திறம்பட நடத்தியது, அதைப் பாராட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்விச் சீர் நடத்த கடந்த ஆண்டு அரசு அரசாணை வெளியிடும் அளவுக்கு முன்மாதிரியாகத் திகழ்வது, பள்ளியைப் பசுமை வளாகமாக மாற்றியது, அடிப்படை வசதிகளே இல்லாத பள்ளியை, தொழில்நுட்பத் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்றியது, பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச் சான்று ISO 9001:2015 பெற்றது ஆகிய காரணங்களுக்காக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தங்கள் ஊர் ஆசிரியர் விருது பெற்றதைப் பாராட்டி, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.13) அன்று பரமத்தியில் விழா எடுத்தனர்.

இந்த நிகழ்வில் க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ரமாதேவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்கள் குப்புசாமி, கந்தசாமி, ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன், நெடுங்கூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லசிவம், ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனுக்கு பொதுமக்கள் சார்பில் நினைவுப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக செல்வக்கண்ணன் கூறும்போது, ''ஊர் சார்பாக இதுவரை கோயில் திருவிழாக்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட ஒருவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. அவர்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பேன்'' என்று நெகிழ்கிறார்.

இதற்கிடையே பள்ளி மாணவர்களின் பெற்றோர் அனைவரும் இணைந்து, நவம்பர் 7-ம் தேதி அன்பாசிரியர் செல்வக் கண்ணனுக்குப் பாராட்டு விழா நடத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x