Published : 15 Oct 2019 10:24 AM
Last Updated : 15 Oct 2019 10:24 AM

நிகழ்வு: டிஸ்னி கார்ட்டூன் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 16: டிஸ்னி தொடங்கப்பட்ட நாள்

உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி ஸ்டூடியோ தொடங்கப்பட்ட நாள் இன்று. 1923 அக்டோபர் 16 அன்று வால்ட் ஓ.டிஸ்னி, ராய் ஓ.டிஸ்னி சகோதரர்கள் டிஸ்னி பிரதஸ்ர் கார்ட்டூன் ஸ்டூடியோவை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள புர்பேங்க் நகரில் தொடங்கினார்கள்.

இப்போது இந்நிறுவனம் வால்ட் டிஸ்னி என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் தயாரித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் உலகப் புகழ்பெற்றவை. 1928-ல் வால்ட் டிஸ்னியும் அப் ஐவர்க்ஸ் என்பவரும் இணைந்து உருவாக்கிய மிக்கி மவுஸ், இன்றளவும் உலகில் அதிக குழந்தைகளை ஈர்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரமாக விளங்குகிறது.

அக்டோபர் 17: சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்

1992 டிசம்பர் 22 அன்று ஐ.நா. பொது அவை வெளியிட்ட தீர்மானத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ஐ சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே அக்டோபர் 17-ஐ சர்வதேச வறுமை ஒழிப்பு நாளாக ஐ.நா. அங்கீகரித்துவிட்டது. இந்த நாளில் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தம் 189-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் 30-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக ‘‘வறுமையை நீக்க குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்” என்பது இந்த ஆண்டுக்கான வறுமை ஒழிப்பு நாளின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 18: சார்லஸ் பேபேஜ், தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு நாள்

1871 – கணினியின் தந்தை என்று அறியப்படும் சார்லஸ் பேபேஜ் லண்டனில் மரணமடைந்தார். கணிதம், பொறியியல், பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணராக இருந்த இவர் இன்றைய கணினிகளுக்கு அடிப்படையாக விளங்கும் கணக்கியல் இயந்திரத்தை (Digital Programmable Computer) கண்டுபிடித்தார்.

1931 - மின்சார விளக்கு உட்பட பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் 84-ம் வயதில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மறைந்தார்.

- தொகுப்பு கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x