Published : 15 Oct 2019 10:02 AM
Last Updated : 15 Oct 2019 10:02 AM

உண்மையான கற்பித்தல் முறை

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இ.எம்.இ.ஏ கலை அறிவியல் கல்லூரியில் 5 பிப்ரவரி 2008-ல் ஆற்றிய உரையின் சுருக்கம்:

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவரையும் பார்க்கும்போதே உங்களுக்குள் மகத்தான மருத்துவர்களை, சிறந்த பொறியாளர்களை, உயரிய சமூகச் செயற்பாட்டாளர்களை, நல்லாசிரியர்களை, மாண்புமிகு நீதிபதிகளை, மிகப் பெரிய அரசியல்வாதிகளைப் பார்க்கிறேன். இந்த இலக்குகளை அடையத் தேவையான பண்புகள் என்ன என்பதை என்னுடைய அனுபவத்தில் இருந்து பகிர்கிறேன் கேளுங்கள்.

என்னுடைய குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், ஐந்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர் ஸ்ரீ சிவசுப்பிரமணியம்தான் நினைவுக்கு வருவார். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கக் கரும்பலகையில் ஓர் பறவையைத் தத்ரூபமாக வரைந்து கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பாடம் எடுத்தார். வகுப்பின் முடிவின் “பறவை எப்படிப் பறக்கிறது என்பது இப்போது புரிந்ததா?” என்று கேட்டார்.

எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன். இப்படி நான் சொன்னதும் மற்ற மாணவர்களுக்காவது புரிந்ததா என்று கேட்டபோது அவர்களும் தங்களுக்குப் புரியவில்லை என்றனர். ஆனால், கொஞ்சமும் சோர்ந்து போகவில்லை அந்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்.

அன்று மாலை எங்கள் வகுப்பின் ஒட்டுமொத்த மாணவர்களையும் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். மணல் குன்றுகளை முட்டி ஆர்ப்பரிக்கும் அலைகளையும் கொஞ்சமும் கீச்சல்களுடன் பறந்து செல்லும் பறவைகளையும் அங்கு கண்டு குதூகலித்தோம். பறவைகள் எவ்வாறெல்லாம் றெக்கை விரித்துப் பறக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்து ரசித்தோம்.

15 நிமிடங்களில் புரிய வைத்தார்

பிறகு அவர் ஒரு கேள்வி எழுப்பினார், “இந்தப் பறவைகளின் இன்ஜின் எங்கே இருக்கிறது, அதற்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது?” தனக்கான சக்தியையும் உந்துதலை யும் பறவை தன் வாழ்விலிருந்தே மூட்டிக்கொள்கிறது.

இவை அனைத்தையும் வெறும் 15 நிமிடங்களில் எங்களுக்குப் புரியவைத்தார் எங்கள் ஆசிரியர். இதுவே உண்மையான கற்பித்தல் முறை. இந்த உதாரணத்தை நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள பல ஆசிரியர்கள் நிச்சயமாகப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x