Published : 15 Oct 2019 09:58 AM
Last Updated : 15 Oct 2019 09:58 AM

தோல்வியில் தோள் கொடுக்கும் தலைவன் 

இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகன எஸ்எல்வி-3 திட்ட இயக்குநராக 1973-ல் பொறுப்பேற்றேன். 1980-ல் ரோகிணி செயற்கைக் கோளைப் புவிச்சுற்றில் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான நிதியும் ஆயிரக்கணக்கான அறிவியல் தொழில்
நுட்ப வல்லுநர்களும் எனக்குத் தரப்பட்டனர்.

1979 ஆகஸ்ட் மாதத்திலேயே நாங்கள் தயார் நிலையில் இருப்பதாக நினைத்தேன். திட்ட இயக்குநர் என்ற முறையில் கட்டுப்பாட்டு அறைக்குள் சென்றேன். செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான செயல்பாடுகளை முடுக்கனேன். முதல் கட்டத்தில் எல்லாம் சீராகவே இருந்தது. ஆனால் இரண்டாம் கட்டத்தில் சிக்கல் உருவெடுத்தது.

புவிச்சுற்றுக்குள் செல்ல வேண்டிய செயற்கைக்கோள் வங்கக் கடலில் விழுந்தது. மிகப் பெரிய வீழ்ச்சி அது.இஸ்ரோவின் அன்றைய தலைவர் பேராசிரியர் சதிஷ் தவான் அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்தத் தோல்விக்கான முழுப்பொறுப்பை தன் தோளில் சுமந்தார். தன்னுடைய குழுவினர் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நேர்ந்துவிட்டது என்றார். இன்னும் ஒரே ஆண்டில் தன்னுடைய குழு வெற்றி காணும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி அளித்தார். அன்றைய தேதியில் நான்தான் அந்தத் திட்டத்தின் இயக்குநர். அது என்னுடைய தோல்வி. ஆனால், தோல்விக்கான முழு பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டார்.

அடுத்த ஆண்டு ஜூலை 1980-ல் மீண்டும் முயன்று செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினோம். ஒட்டுமொத்தத் தேசமும் கொண்டாட்டத்தில் திளைத்தது. மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இப்போது, பேராசிரியர் தவான் என்னை அழைத்து, “நீ இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்து” என்றார்.

கற்றுக் கொடுத்தது

அன்று வாழ்வின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாடத்தை நான் கற்றேன். தோல்வியடைந்தபோது இயக்கத்தின் தலைவன் அதைத் தன்னுடையது என்றான். வெற்றி வந்தபோது அதைக் குழுவிடம் தந்தான். இந்த மகத்தான மேலாண்மை பாடம் எந்தப் புத்தகத்தையும் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய அனு
பவமே அதைக் கற்றுக்கொடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x