Last Updated : 09 Oct, 2019 10:10 AM

 

Published : 09 Oct 2019 10:10 AM
Last Updated : 09 Oct 2019 10:10 AM

நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் கோவை மாணவி

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யாபவன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர், மாணவி அ.பாவிகா. ரேஸ்கோர்ஸில் பெற்றோர் அமித் துகார்-ஷில்பா துகாருடன் வசித்து வரும் இவர், சிறு வயது முதலே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற, தேசிய அளவிலான சீனியர் நீச்சல் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற இவர், 1 வெள்ளி, 2 வெண்கலப்பதக்களை வென்று வந்துள்ளார்.

“3-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் நீச்சல் பழக அனுப்பி வைத்தனர். அதனால் ஏற்பட்ட ஆர்வம் நீச்சலை முழுமையாகக் கற்றுக் கொள்ளத் தூண்டியது.

5-ம் வகுப்பு படிக்கும் போது பயிற்சியாளர் ரமேஷ் என்பவரிடம் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினர். அதைத்தொடர்ந்து போட்டிகளிலும் கலந்துக் கொள்ளத் தொடங்கினேன். அதே ஆண்டு மாவட்ட அளவில் கலந்து கொண்ட முதல் போட்டியில் பதக்கம் கிடைத்தது. நீச்சலில் ‘ப்ரீ ஸ்டைல்' என்னுடைய போட்டி பிரிவாகும்.

தேசிய நீச்சல் போட்டி

6-ம் வகுப்பு படிக்கும் போது, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதன் மூலம், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2015-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றேன். 2016-ம் ஆண்டு சர்வதேச நீச்சல் போட்டியில் துருக்கி நாட்டில் நடைபெற்றது.

அதில் 1,500 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' பிரிவில் 5-வது இடம் கிடைத்தது. இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று 200, 400, 800, 1,500 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' பிரிவுகளில் தங்கப்பதக்கங்களும், 4X100 'ப்ரீ ஸ்டைல்' மற்றும் 4X100 மெட்லே பிரிவில் வெள்ளிப்பதக்கங்கள் வென்றேன்.

கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில போட்டியில் 4 பிரிவுகளில் தங்கம் வென்றேன். கடந்த செப்டம்பர் மாதம் போபாலில் நடைபெற்ற போட்டியில் ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்களை வென்றேன். நீச்சல் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்” என்றார், அ.பாவிகா.

வீட்டின் அலமாரி முழுவதும் குவிந்திருந்த பரிசுக் கோப்பைகளுக்கு மத்தியில் கண்கவர் ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்து நின்றன. அவை நம்மையும் ஈர்க்கவே செய்தன. 'ஓவியங்கள் நான் வரைந்ததுதான்' என்று இன்ப அதிர்ச்சியளித்தார், மாணவி. நீச்சல் மட்டுமின்றி, ஓவியம் தீட்டுவதிலும் வல்லவரான இவர் படிப்பிலும் சிறந்து விளங்குகிறாராம். அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு கிளம்பினோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x