Published : 08 Oct 2019 04:35 PM
Last Updated : 08 Oct 2019 04:35 PM

டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டால் திருமணம் நடக்காது என்று பயமுறுத்தினார்கள்: சானியா மிர்ஸாவின் சிறுவயது நினைவுகள் 

புதுடெல்லி

டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டால் திருமணம் நடக்காது என்று பலரும் தன்னை பயமுறுத்தியதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையாக விளங்குபவர் சானியா மிர்ஸா. 2007-ம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் அவர் 27-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இந்திய வீராங்கனைகளில் யாரும் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டதில்லை.

இந்நிலையில் டெல்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சானியா மிர்ஸா தன் சிறு வயது அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:
நான் டென்னிஸ் போட்டிகளில் ஆடத் தொடங்கியபோது எனக்கு 8 வயது. அப்போது என்னைச் சுற்றியிருந்த பலரும், ”நீ டென்னிஸ் போட்டிகளில் ஆடினால் வெயிலில் நின்று கறுத்துப் போய்விடுவாய். அதனால் டென்னிஸ் போட்டிகளில் ஆடாதே” என்று பயமுறுத்தினார்கள். ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன்.

தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்களை வாங்கிக் குவித்த பி.டி.உஷாவை ரோல் மாடலாகக் கொண்டு என் முயற்சிகளை தொடர்ந்தேன். அதனால்தான் என்னால் இந்த விளையாட்டில் சாதிக்க முடிந்தது.

நம் நாட்டில் சிலர் பெண்கள் அழகாக இருந்தால் போதும் என்றும், அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பதுடன் நின்றுவிட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் என்னைச் சந்தித்த ஒருவர், ‘‘உங்கள் குழந்தை எங்கே?” என்று கேட்டார். நான் குழந்தை ஹைதராபாத்தில் உள்ள எங்கள் வீட்டில் இருப்பதாக கூறினேன். அதற்கு அவர், ”நீங்கள் உங்கள் குழந்தையுடன் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

நான் அவரிடம், ‘‘உங்கள் குழந்தை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘என் குழந்தை வீட்டில் இருக்கிறது” என்றார். இதைக் கேட்ட நான், ‘‘நீங்களும் உங்கள் குழந்தையுடன் இருந்திருக்க வேண்டும்” என்றேன்.

பெண்கள் குடும்பப் பணிகளை மட்டும்தான் கவனிக்க வேண்டும் என்ற போக்கு மாறவேண்டும். பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். எனக்கு பி.டி.உஷா மாடலாக இருந்ததுபோல் இன்றுள்ள இளம் பெண்களுக்கு மாடல்களாக பல முன்னணி விளையாட்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களைப் பார்த்து இளம் பெண்கள் முன்னேற வேண்டும்.
இவ்வாறு சானியா மிர்ஸா பேசினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x