Published : 07 Oct 2019 06:37 PM
Last Updated : 07 Oct 2019 06:37 PM

நாடகங்கள் மூலம் காந்திய சிந்தனைகளைப் பரப்பும் தலைமை ஆசிரியர்

மதுரை

விடுமுறை நாட்களில் குடிசைப் பகுதியில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகளை தேடிச் சென்று கதைகளை சொல்லியும், நடித்துக் காட்டியும் ஆசிரியர் ஒருவர் காந்திய சிந்தனைகளைப் பரப்பி வருகிறார்.

மதுரை டாக்டர் டி.திருஞானம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் க.சரவணன், குழந்தைகளுடன் குழந்தைகளாகி வகுப்பறையில் கதைகள் சொல்லியும், நடித்துக் காட்டியும் வகுப்பெடுக்கிறார். இந்த வகுப்பறை கற்பித்தல், குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக முதல் பருவ விடுமுறை நாட்களில் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் பொது மக்களிடமும், பள்ளிக் குழந்தைகளிடமும் காந்திய சிந்தனை குறித்த புகைப்படக் கண்காட்சி, நாடகம், கதை சொல்லுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

மேலும் மதுரையில் ஒவ்வொரு குடிசைப் பகுதியாகச் சென்று அங்குள்ள பெற்றோரிடம் பேசி அவர்களது குழந்தைகளை இவரே காந்தி அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்று பொதுமக்களுக்காக காந்தி வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நாடகமாக நடித்திக் காட்டி காந்திய சிந்தனைகளைப் பரப்பி வருகிறார்.

காந்தி வாழ்வில் நடந்த சம்பவங்களை சித்தரித்தல் வழியாக உண்மை பேசுதல், அன்பு செய்தல், நேர்மையாக நடத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், ஒற்றுமையாக வாழ்தல், சர்வ சமய வழிபாடு நடத்துதல், தீண்டாமை ஒழித்தல், நற்சிந்தனை வளர்த்தெடுத்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் போன்ற பண்புகளை குழந்தைகளுக்கு நடித்துக் காட்டி எளிமையாகப் புரிய வைக்கிறார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் சரவணன் கூறியதாவது:

காந்தி கடைப்பிடித்த உண்மை, சத்தியம், அன்பு செய்தல், சகிப்புத் தன்மை, ஒற்றுமையாக வாழ்தல் போன்ற பண்புகளைக் குழந்தைகளிடம் வலியுறுத்த தொடர்ந்து காந்தி கதைகளைப் பொதுவெளியில் கூறி வருகிறேன். அதுமட்டுமின்றி பொதுவெளியில் எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து புகைப்பட கண்காட்சி நடத்துவதன் வழியாக பெற்றோருக்கு காந்திய சிந்தனைகளைப் பரப்புகிறோம். அதன் மூலம் காந்திய நற்பண்புகளை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க முயற்சி செய்கிறோம்.

தாய் வழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி, ஏழு வயது முதல் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிறார். கல்வி அறிவை புகுத்துவதுடன், சமூகத்துக்கு பயன்படக்கூடியவகையில் அமைய வேண்டும். தற்சார்பு உடையராக மாணவர் திகழ ஆதாரக் கல்வியை காந்தி வலியுறுத்துகிறார்.

இன்றைய சூழலில் அதை எந்த விதம் கையாள வேண்டும் என்பதற்கு காந்திய கல்விச் சிந்தனையைப் படிக்க சக ஆசிரியர்களை அறிவுறுத்துகிறேன். இன்றைய கல்விக் கொள்கையை காந்திய கல்விக் கொள்கையுடன் ஒப்பிடுவதன் வழியாக குழந்தைகளுக்குத் தேவையான கல்வி குறித்துச் சிந்திக்க ஆசிரியர்களைத் தூண்டுகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x