Last Updated : 21 Jun, 2023 04:08 AM

 

Published : 21 Jun 2023 04:08 AM
Last Updated : 21 Jun 2023 04:08 AM

சர்வதேச யோகா தினம்: சூரிய நமஸ்காரம் எனும் அற்புதம்

பதின்பருவம்தான் மனதையும் உடலையும் ஒருசேர ஆராதிக்க சரியான நேரம். நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான், பின்னாளில் வரக்கூடிய அத்தனை நோய்களையும் தவிர்க்க உதவும். இந்த காலகட்டத்திற்கு சூர்ய நமஸ்காரம் மிக அற்புதமான ஆசனமாகும். ஆனால், பயிற்சி செய்வதற்கு முன் சிறந்த யோக சிகிச்சை நிபுணரிடம் முறையாக கற்றுப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை என சூர்ய நமஸ்காரம் 6 சுற்றுக்கள் செய்ய ஆரம்பிக்க பள்ளி பருவமே ஏற்றது. ஏனென்றால் இந்த வயதில் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உடல் இலகுவாக வளைந்து கொடுக்கும். சூரிய நமஸ்காரம் செய்தாலே பன்னிரெண்டு விதமான ஆசனங்களின் பலன் நமக்கு கிடைத்து விடும் என்பது இதன் தனிச் சிறப்பு.

செய்வது எப்படி?

முதலில் நேராக நின்று கொண்டு மார்புக்குக் குறுக்கே கைகள் இரண்டையும் கூப்பி நமஸ்கார முத்திரையில் வைக்க வேண்டும். பிறகு அப்படியே பின்னோக்கி வளைய வேண்டும். பின், முன்னோக்கி வளைந்து, கீழ் நோக்கிக் குனிந்து முட்டியை மடக்காமல், இரண்டு கைகளாலும் இரண்டு பாதங்களையும் தொட வேண்டும்.

இது பாதஹஸ்த ஆசனம்.

அடுத்து வலது காலை மட்டும் முன்புறமாக வைத்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். இது அஷ்வ சஞ்சலனம். அடுத்து, இரு கால்களையும் பின்னே நீட்டி, மலை போல ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவில் நிற்க வேண்டும். இது மேரு ஆசனம். பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவது போலப் படுக்க வேண்டும். இது அஷ்டாங்க பூமி ஸ்பரிசம். பிறகு, தலையை மட்டும் மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இது புஜங்க ஆசனம். மீண்டும் மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலனம், பாத ஹஸ்த ஆசனம் என்று பின்னோக்கி ஒவ்வொரு நிலையாகப் போய், இறுதியாக நமஸ்கார முத்திரை நிலையில் நின்று, கைகளைத் தொங்க விட வேண்டும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?

தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், கழுத்துவலி, ஸ்பான்டிலைசிஸ், தண்டு வடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் சூரிய நமஸ்காரம் கண்டிப் பாகச் செய்யக் கூடாது. ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று எந்த ஆசனமாக இருந்தாலும், தேர்ந்த குருவின் வழிகாட்டுதல்படியே யோகப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

- ஆர். ரம்யா முரளி

கட்டுரையாளர்: யோகா நிபுணர் யோகா செய்பவர்:
அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்

யோகா பயில உதவும் 5

யோகா எனும் அறிவியல் பூர்வமான கலையில் மொத்தம் 8 கட்டங்கள் உண்டு. அவற்றில் ஆசனம் மற்றும் பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) என்கிற இரண்டு படிகளை மட்டும் எல்லோரும் பின்பற்றினாலே உடலும் மனமும் டானிக் குடித்தது போன்ற உற்சாகம் அடைந்துவிடும்.

யோகா ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் முறையாகப் பயில்வதற்கு முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விதிகள் இதோ:

1. பொதுவாக உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் ‘warmup’ எனும் தயார் செய்யும் அசைவுகளைச் செய்வதுண்டு. யோகாசனத்தை பொருத்தவரை மூச்சுப் பயிற்சிதான் அது. உங்கள் சுவாசத்தை கண்மூடி கவனித்தபடி மூச்சை உள்ளிழுத்து, சில நொடிகள் தக்கவைத்து, வெளியேற்றுதல் உங்கள் மனதை லேசாக்கும். 10 முறை இதனை செய்துவிட்டு ஆசனம் செய்யத் தொடங்குங்கள்.

2. மேனியை இறுக்காத பருத்தி ஆடையை உடுத்தி ஆசனம் செய்வது நல்லது.

3. அமர்ந்து, படுத்து யோகாசனம் செய்ய தகுந்த நீளம் மற்றும் அகலம் கொண்ட படுக்கை விரிப்பின் மீது சவுகரியமாக உட்கார்ந்தபடி ஆசனம் செய்யுங்கள்.

4. ஆசனம் செய்யுமுன் உடலை தூய்மைபடுத்த காலைக்கடன்களை முடித்துவிடுவது நல்லது.

5. அலைபேசி, தொலைக்காட்சி, டேப் போன்ற சாதனங்கள் நம் மனதை அலைக்கழிப்பவை. காலை நேரத்தில் அவற்றை மறந்து யோகாசனம் செய்து பாருங்கள் நிச்சயம் புத்துணர்ச்சி பிறக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x