Last Updated : 22 Aug, 2017 09:48 AM

 

Published : 22 Aug 2017 09:48 AM
Last Updated : 22 Aug 2017 09:48 AM

தொடர் சங்கிலி 2- பொதுத் திறவுகோல் சங்கேத முறை

தொடர் சங்கிலித் தொழில் நுட்பத்தைப் பற்றிய தொட ரின் இரண்டாம் பகுதி இது. முதல் பகுதியைப் படிக்காதவர்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணையதளத்துக்குச் (tamil.thehindu.com) சென்று படித்துக்கொள்ளலாம். முதல் பகுதியில் ‘பொதுத் திறவுகோல் சங்கேத முறை’ (Public Key Cryptography) என்றால் என்ன என்பதைப் பார்த்தோம்.

அதன் பயன்பாடு என்ன என்பதைச் சுருக்கமாக பார்த்துவிடலாம். ‘பொதுத் திறவுகோல் சங்கேத முறை’யின் பிரபல உபயோகத்தை நாம் இணையத்தின் பொதுவான பயன்பாட்டிலிருந்தே பார்க்க முடியும். வலைதளங்களில் உலவும்போது, HTTP என்றும் HTTPS என்றும் வலைதள முகவரிகள் இருப்பதைப் பார்த் திருப்பீர்கள்தானே ? HTTPS என்பது வலைதள முகவரிக்கு முன் ஒட்டிக்கொண்டிருந்தால், அது மேற்படித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது தளத்தைப் பாதுகாக்கிறது என்பதைக் காட்டுகிறது. HTTPS தளத்துக்கு நீங்கள் சென்றதும், உங்களின் பொதுத் திறவுகோலை வாங்கிக்கொண்ட வலைதளம், அதன் உதவியுடன் வலைப் பக்கத்தைச் சங்கேதக் குறிகள் கொண்ட கொத்து பரோட்டாவாக மாற்றி உங்களின் தேடுதளத்துக்கு (brower - ப்ரவுசர்) அனுப்புகிறது. அதைப் பெற்றுக்கொள்ளும் தேடுதளம், உங்களின் பிரத்யேகத் திறவுகோலைக் கொண்டு மீண்டும் வலைப்பக்கமாக மாற்றிவிடுகிறது. இந்தத் தகவல் பரிமாற்றத்தின்போது யாராவது இடையில் அவற்றைத் திருட முயற்சித்தால், அவர்களுக்குச் சங்கேத மொழியில் திரிக்கப்பட்டிருக்கும் தகவல்தான் கிடைக்கும்.

அடிப்படைக்குள் முற்றிலும் முழுகிவிட்டோம். மூச்செடுத்து மேலே வந்து தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்துக்கு ‘ஹலோ’ சொல்லலாம். அடுக்கடுக்காகப் புதுமையாக்கல்களைத் தன்னகத்தே கொண்டு கிடுகிடுவென வளர்ந்தபடியிருக்கும் இந்தத் தொழில்நுட்பத்துக்கு இன்னும் 10 வயதுகூட ஆகவில்லை.

அதெல்லாம் சரி, தொடர் சங்கிலி என்றால் என்ன என்று உங்களுக்குப் பரபரக்கிறதா? விவரிக்கிறேன். இணையத்தில் இன்று இயங்கும் சேவைகள் அனைத்துக் கும் மையப்படுத்தப்பட்ட தலைமை என்ற ஒன்று இருக்கிறது. உதாரணத்துக்கு, கூகுள், ஃபேஸ்புக், ஊபர் போன்ற பெரும் சேவைகளாக இருந்தாலும் சரி, இல்லை உங்கள் பகுதி வங்கியின் அலைபொருள் மூலம் வழங்கப்படும் சேவையாக இருந்தாலும் சரி - மையமாக வைக்கப்பட்ட தகவல்பேழை ஒன்றின் உதவியுடன் அந்தச் சேவை உங்களுக்கு வழங்கப்படுகிறது. சேவையை வழங்கும் நிறுவனம் மையமாக மேலே அமர்ந்து சேவை வழங்கப்படும் முறை மற்றும் தரத்தைக் கண்காணிக்கிறது. லாபத்தை அடிப்படியாகக் கொள்ளாத நிறுவனங்கள்கூட, தங்கள் சேவைகளை இப்படி மையப்படுத்திய அதிகாரம் மூலமாகவே அளிக்க இயலும். உதாரணத்துக்கு, முற்றி லும் திறந்த, எந்தவித லாபநோக்கமும் இல்லாத விக்கிபீடியா நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். தன்னார்வத்துடன் செயல்படும் உங்களையும் என்னையும் போன்றோர் தகவல்களைப் பதிவுசெய்வ தன் மூலமாகத்தான் விக்கிபீடியா மிகப் பெரும் தகவல்பேழையாக இயங்குகிறது. எனினும், விக்கிபீடியா தளம் இயங்குவதற் கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு விக்கிபீடியா என்ற நிறுவனத்தின் கண்காணிப்பில் இருக்கிறது. இப்படி மையப்படுத்தப்பட்ட சேவைகள் பயன்படுத்த எளிமையாக இருந்தாலும், இவற்றின் மிகப் பெரிய குறைபாடு - ஒரு சேவையின்மீது மற்றொரு சேவைக்கான நம்பிக்கையின்மை. எளிய உதாரணம் மூலம் இதை விளக்கலாம். எனது வங்கியில் இருக்கும் எனது கணக்கிலிருந்து உங்கள் வங்கியில் இருக்கும் உங்கள் கணக்குக்கு நான் பணம் அனுப்ப வேண்டும். காசோலை ஒன்றைக் கொடுத்தால், உங்கள் வங்கி எனது வங்கியைத் தொடர்புகொண்டு எனது கணக்கில் பணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே உங்கள் கணக்கில் வரவு வைக்கிறது. இணையம் மூலமாகச் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளும் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே நடத்தப்படுகின்றன.

கார் அல்லது வீடு வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளின்போது, வாங்குபவர் கொடுக்கும் பணம் ‘எஸ்க்ரோ’ (ESCROW) எனப்படும் பொதுவான கணக்கில் வைக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பவரின் கணக்குக்கு மாற்றப்படுகிறது. இந்த நம்பிக்கையின்மையை எப்படித் தீர்ப்பது ?

மேற்கண்ட உதாரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். உங்கள் வங்கிக் கணக்கில் உங்களின் வரவு/செலவு விவரங்களோடு எனது கணக்கின் வரவு/செலவு விவரங்களும் உங்கள் வங்கியின் தகவல் பேழை யில் இரண்டறக் கலந்திருந்தால் உடனடி யாக எனது கணக்கிலிருந்து பணத்தை உங்கள் கணக்குக்கு மாற்றிவிடலாம்தானே? இப்படி நடக்கும்போது எனது வங்கியின் தகவல்பேழையும் மேற்படி பரிவர்த்தனையை அப்படியே பதிவுசெய்துகொண்டால் எப்படி இருக்கும்? இன்னும் ஒருபடி மேலே செல்லலாம். உலகில் இருக்கும் அனைத்து வங்கிகளின் தகவல்பேழைகளும் இதுபோலவே ஒருவருக் கொருவர் செய்துகொள்ளும் பரிவத்தனைகளைப் பதிவுசெய்துகொண்டால் என்ன ஆகும்? வங்கிகளின் தகவல்பேழைகள் அந்தந்த நிறுவனங்களை இயக்க மட்டுமே பயன்படாமல், தகவல் சேமிப்பு என்பது பரவலாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் அல்லவா? தகவல்களை இப்படிச் சேமிக்கவும், அதே நேரத்தில் விநியோகிக்கவுமான தொழில்நுட்பம்தான் தொடர் சங்கிலி.

இந்தத் தொடரை அடுத்த 3 நாட்களுக்குத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு தொடர் சங்கி லித் தொழில்நுட்பத்தில் பிரபலமாகிவரும் ‘சங்கேத இணையப் பணம்’ (crypto-currency - கிரிப்டோ கரன்சி’) ஒன்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதில் கலந்துகொள்ள - +1 313 251 3770 என்ற எண்ணுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வாட்ஸப் தகவலாக அனுப்பலாம்.

-அண்டன் பிரகாஷ், எழுத்தாளர்,

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்,

தொடர்புக்கு: anton.prakash@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x