

பெண் வடிவிலான ‘ப்யூசியா’ மலர்.
பழநி: கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துள்ள பெண் வடிவிலான ‘ப்யூசியா’ மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத்துறையினர் மூலம் பராமரிக்கப்படும் ரோஜா பூங்காவில் பல்வேறு வகையான ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காவில், மொத்தம் 10 ஏக்கரில் 1,500 வகையான 16,000 செடிகள் உள்ளன. இது தவிர, பல்வேறு வகையான கால நிலைகளில் பூக்கும் மலர்ச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன.
தற்போது பெண் வடிவிலான ‘ப்யூசியா’ மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. ப்யூசியா மலர் பார்ப்பதற்கு மனித உருவில் தலை, ஆடை, பாவாடை அணிந்த உடல், கால்களை உடைய பெண் போன்று இருக்கும்.
காற்றில் மலர் ஆடும்போது, பெண் நடமாடுவதுபோல் தோன்றும். இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், பெண் வடிவிலான ப்யூசியா மலர் சிவப்பு, வெள்ளை, நீல நிறம் என 8-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் உள்ளன.
ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை உடையது. கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக அதிகளவில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றார்.