

பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையர் அயந்தன்.
நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களுக்கும், இலங்கை கடற்கொள்ளையர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை நாகை மீனவர்கள் பிடித்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் 2 பேர் படகு மூலம் தப்பினர். நாகை மாவட்டம் செருதூரிலிருந்து பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கடந்த 25-ம் தேதி சக்திமயில், அபிமன், பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த அபி ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அங்கு ஒரு படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் வந்தனர். மீனவர்களைத் தாக்கி, படகில் இருந்த மீன்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன் ஆகிய வற்றை பறித்துக் கொண்டு, வலையையும் அறுக்க முற்பட்டனர்.
அதை தடுக்க முயன்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், கடற்கொள்ளையர்களில் ஒருவரை செருதூர் மீனவர்கள் பிடித்தனர். மற்ற 2 பேர் படகில் தப்பினர்.
பிடிபட்ட நபர் இலங்கை காங்கேசன்துறை வழலையைச் சேர்ந்த அயந்தன் என்பதும், இவர் உள்ளிட்ட 3 பேரும், இதற்கு முன் செருதூர் மீனவர் மணிவாசகம் என்பவரது படகை மறித்து, அதிலிருந்தவர்களை தாக்கி உடமைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
பின்னர் அவரை செருதூர் மீன்பிடி இறங்கு தளத்துக்கு நேற்று அழைத்து வந்து கீழையூர் போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். கடலில் நடந்த மோதலில் காயமடைந்த அயந்தன், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல, கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த செருதூர் மீனவர்கள் 7 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர் மணிவாசகம் கூறும்போது, எங்கள் படகை வழிமறித்த இலங்கை கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்களை பறித்துக் கொண்டனர்.
தொடர்ந்து நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர். எனது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, இனி நீங்கள் வந்தால் பெட்ரோல் குண்டு வீசி கொன்று விடுவோம் என மிரட்டினர் என்றார்.
தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை தமிழக மீனவர்கள் பிடித்து வந்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.