

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
ஊட்டி: மே தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் ஏராளமானோர் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனால் பூங்காக்களில் நுழைவு சீட்டு வாங்க சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஊட்டியில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், அனைத்து விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு, இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.
சமவெளிப் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகம் வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் ஊட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா வாகனங்கள், நீதிமன்ற உத்தரவுப்படி மசினகுடி - கல்லட்டி வழியாக ஊட்டி செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், சுற்றுலா வாகனங்கள் கூடலூர் வழியாகச் செல்கின்றன.
இதனால், கூடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. உள்ளூர் வாகனங்களை இயக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் ஓட்டுநர்கள், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.