

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகில் சவாரி செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை ஒன்றரை மணி நேரம் vees முன்னதாக காலை 6.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இனி, சூரிய உதயத்தை கண்டு முடித்ததும், விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்லலாம்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இவற்றை தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டு பார்த்து வருகிறார்கள்.
இதற்காக, தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 சாதாரண படகுகளும், தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரு சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பகவதி அம்மன் கோயிலை அடுத்துள்ள, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறையில் இருந்து, தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த 5 படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. படகு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.100 வீதமும், கியூவில் காத்துநிற்காமல் நேரடியாக படகுக்கு செல்லும் வகையில் சிறப்பு கட்டணமாக ஒருவருக்கு ரூ.300 வீதமும் வசூலிக்கப்படுகிறது.
இந்தப் படகுகளில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுப்பதற்காக, அதிகாலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகு துறைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
ஆனால், காலை 8 மணிக்கு பிறகுதான் படகு போக்குவரத்து தொடங்குகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிகமானோர் அதிகாலையில் இருந்தே காத்து நிற்கின்றனர். அத்துடன் இயற்கை சீற்றங்களால் படகு ரத்தாவதும், அதிகமான கூட்ட நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைவதும் தொடர்கிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பரிந்துரையின் பேரில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து நேரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு பதிலாக, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக, அதாவது காலை 6.30 மணிக்கு படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு வரும் சுற்றுலா பயணிகள், உடனே படகு சவாரி செய்ய வசதியாக இந்த நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.
இதற்கான கருத்துரு தயாரிக்கப் பட்டு சென்னை பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்கு நரின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நேர மாற்றம் அமலுக்கு வரும். அநேகமாக வருகிற சபரிமலை சீஸன் நவம்பர் மாதம் தொடங்கும் நேரத்தில், இந்த படகு போக்குவரத்து நேர மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.