

புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கல்விக்கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறி பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்விக் கடன் பெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.
அதற்கான ரூ.15 கோடி கடன் மற்றும் வட்டித் தொகையை தேசிய நிதிக் கழகத்திற்கு அரசு செலுத்தும் என்று கூறி அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2013– 14ம் ஆண்டு மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனைத் வட்டியுடன் கணக்கிட்டு 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று மேம்பாட்டுக் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்டப்பேரவையில் ஒரு கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் முதல்வர் ரங்கசாமி தவறியுள்ளார்.
முதல்வரின் அறிவிப்புக்கு துறை சார்ந்த கழகங்கள் மதிப்பு தரவில்லை. நோட்டீஸை பார்த்தபோது மக்களை ஏமாற்றுவதற்காக சட்டமன்றத்தில் இந்த வாக்குறுதி தரப்பட்டதாக சந்தேகம் எழுகிறது. இந்நோட்டீஸை திரும்பப் பெறாவிட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.