கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்

கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் ‘கோடை விழா’ வெள்ளிக் கிழமை (இன்று) காலை ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கியது.

மலைகளின் ’இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்படுகிறது.

இதை பார்த்து ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தாண்டு துறை சார்ந்த அமைச்சர் நியமிக்க தாமதமானதால் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தேதியை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில் மே 19-ம் தேதி முடிவு செய்யப்பட்டு, மே 20-ம் தேதி 63-வது மலர் கண்காட்சி தொடங்கியது. ஆனால், சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழா தேதி மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று (மே 21) சுற்றுலாத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டதை அடுத்து, இன்று (மே 22) வெள்ளிக் கிழமை கோடை விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விழாவை, கொடைக்கானல் கோட்டாட்சியர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்த ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலை துணை இயக்குநர் சந்திர கவிதா, வட்டாட்சியர் பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்களினல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும், கலைக் குழுவினருடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மே 25ம் தேதி படகு போட்டி, மே 26ம் தேதி மீன் பிடி போட்டி, மே27ல் படகு அலங்கார போட்டி, மே 29ல் நாய் கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மே 31ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நிறைவு பெறுகிறது.

கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்
மேகேதாட்டு அணை விவகாரம்: தவெக அரசின் நிலைப்பாட்டை விளக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in